Home /News /national /

திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காததால் விரக்தி.. கேஸ் போட்ட பக்தர்.. 50 லட்சம் இழப்பீடு வழங்க தேவஸ்தானத்துக்கு உத்தரவு..

திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காததால் விரக்தி.. கேஸ் போட்ட பக்தர்.. 50 லட்சம் இழப்பீடு வழங்க தேவஸ்தானத்துக்கு உத்தரவு..

திருப்பதி

திருப்பதி

16 ஆண்டுகள் காத்திருந்தும் தமக்கு தேவஸ்தானம் மேல் சாத்து வஸ்திரம் சேவையில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் பெருமளவில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது - மனுதாரர்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tirupati, India
    திருப்பதியில் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்காத விரக்தியில் பக்தர் ஒருவர் போட்ட வழக்கில் ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தேவஸ்தானத்துக்கு சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சேலத்தை சேர்ந்த ஹரிபாஸ்கர் என்பவர் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் மேல்சாத்து வஸ்திர சேவை என்ற பெயரில் ஆன கட்டண தரிசன  சேவைக்கு ரூ.12,500 செலுத்தி 27.06.2006 அன்று முன்பதிவு செய்தார். அவருக்கு 10. 7.2020 அன்று சேவையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

    அதன் பின்னர் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    தொடர்ந்து வேறொரு நாளில் கட்டண சேவை டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் அந்தந்த சேவைகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கட்டண சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த பக்தர்கள் வேறு நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடலாம் என்றும் முன்பதிவு கட்டணமாக செலுத்தப்பட்ட தொகை திரும்பி அளிக்கப்படும் என்றும் தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் 16 ஆண்டுகள் காத்திருந்தும் தமக்கு தேவஸ்தானம் மேல் சாத்து வஸ்திரம் சேவையில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் பெருமளவில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேவஸ்தானத்தின் சேவையில் குறைபாடுகள் உள்ளன என்று கூறி அவர் சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

    அவருடைய மனுவை விசாரணைக்கு ஏற்று விசாரணை முடிவில் 18.8.2022 அன்று தீர்ப்பு வழங்கி சேலம் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதில் 1 வருட காலத்தில் மனுதாரருக்கு " மேல் சாத்து வாஸ்திர சேவை" என்ற கட்டண சேவையில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும், இல்லாவிட்டால் ரூ.50,00,000/- ரூபாயை சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக வழங்க வேண்டும். மேலும், தரிசனத்திற்காக அவர் செலுத்திய ரூ.12,250/- தொகையும் உத்தரவு பிறப்பித்த 2 மாத காலத்தில் திருப்பி கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 6% வட்டியுடன் சேர்த்து தரவேண்டும் என்றும் சேலம் நுகர்வோர் குறைதீர்மன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பு திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அளவிலும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பக்தர்கள் இதே போன்ற விவகாரத்தில் தேவஸ்தானத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு கொடுத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    ஒருவேளை சேலம் ஹரி பாஸ்கருக்கு வஸ்திர சமர்ப்பணம் கட்டண சேவையில் கலந்து கொள்ள தேவஸ்தான நிர்வாகம் வாய்ப்பளித்தால்,மேலும் ஏராளமான பக்தர்கள் தங்களுக்கும் வாய்ப்பு வேண்டும் என்று கேட்கக்கூடும் என்று தேவஸ்தான நிர்வாகம் கருதுகிறது. அவருக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுத்தால் மேலும் ஏராளமான பக்தர்கள் இழப்பீடு கோருவார்கள். எனவே,இந்த விஷயத்தில் மேல்முறையீடு செய்ய தேவஸ்தான நிர்வாகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    வஸ்திர சேவையின் சிறப்பு:

    ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சுப்ரபாத சேவையை தொடர்ந்து அபிஷேக சேவை நடைபெறும். அபிஷேக சேவையின் ஒரு பகுதியாக வஸ்திர சமர்ப்பண சேவையும் நடைபெறும். வஸ்திர சமர்ப்பணம் சேவை மூலம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு வஸ்திர சமர்ப்பணம் செய்யலாம்.

    தற்போதைய நிலையில் வஸ்திர சமர்ப்பண சேவையில் கலந்து கொள்ள பக்தர்கள் தலா ஐம்பதாயிரம் ரூபாய் பணம் செலுத்த வேண்டும். அபிஷேக சேவைக்கு உரிய கட்டணம் ரு 2,250 ஆகும். இந்த சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பக்தர்கள் சுமார் 15 ஆண்டுகள் வரை முன்பதிவு செய்து வைத்துள்ளனர். மிக முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் ஒவ்வொரு வாரமும் மிக மிக குறைந்த அளவில் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவை ஆகியவற்றிற்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இதையும் வாசிக்க:  மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த கடத்தல் செம்மரக்கட்டைகளை ஏலம் விடும் ஆந்திர அரசு..

    சமீபத்தில் திருப்பதியில் குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்காக நிதி திரட்ட 'உதய அஸ்தமன சேவை'என்ற பெயரிலான கட்டண சேவை டிக்கெட்டை தலா ஒரு கோடி ரூபாய் விலையில் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது. வெள்ளிக்கிழமை அன்று அபிஷேகம் மற்றும் வஸ்திர சேவை ஆகியவை இருப்பதால் அன்று மட்டும் அந்த டிக்கெட்டின் விலை ஒன்றரை கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையும் வாசிக்க: திருப்பதியில் 72 மணிநேரத்தில் விற்றுத் தீர்ந்த 6 லட்சம் தரிசன டிக்கெட்டுகள்

    இதில் வேடிக்கை என்னவென்றால் வெள்ளிக்கிழமை டிக்கெட்டுகள் வெளியிடப்பட்ட ஒரே நாளில் விற்று தீர்ந்து விட்டன. அந்த அளவிற்கு ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் அபிஷேகம் மற்றும் வஸ்திர சமர்ப்பண சேவை ஆகிய டிக்கெட்களுக்கு பக்தர்களிடையே வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Tirumala Tirupati, Tirupathi

    அடுத்த செய்தி