திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு நேற்று நிறைவடைந்தது. பிரம்மோற்சவம் நடைபெற்ற 9 நாட்களில் 6,00,000 பக்தர்கள், திருமலையில் தரிசனம் செய்ததோடு உண்டியல் காணிக்கையாக மட்டும் 21 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.
108 திவ்ய தேசங்களில் மிகப் புகழ் பெற்ற ஸ்தலமான திருமலை திருப்பதியில் கடந்த 13-ம் தேதி மாலை கருட கொடியேற்றத்துடன் இந்தாண்டின் பிரம்மோற்சவம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 17-ம் தேதி இரவு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். 18-ம் தேதி காலை அனுமன் வாகனத்தில் பெருமாள் வீதியுலாவும், மாலையில் தங்கத் தேரோட்டமும் நடந்தன.
மேலும் 8-ம் நாளான 20-ம் தேதி காலை தேரோட்டம் நடைபெற்றது. 9-ம் நாளான நேற்று காலை வராக புஷ்கரிணியில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பின் இரவு கொடியேறக்கத்துடன் பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.
இந்த பிரம்மோற்சவத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தது. 4 மாட வீதிகளில், கூடுதல் கழிவறைகள் உட்பட பல்வேறு வசதிகள் 26 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டன. விழா நடக்கும் இடங்களில் தேவையான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
பிரம்மோற்சவம் குறித்து நேற்று பேட்டியளித்த திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சிங்கால், கடந்த 9 நாட்களில் மட்டும் 6,00,000 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.மேலும், உண்டியல் மூலம் 21 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் சிங்கால் தெரிவித்தார்.
ஆர்ஜிதி சேவை டிக்கெட்டுகள், லட்டு, வடை விற்பனை என ஒட்டுமொத்தமாக, கடந்த 10 நாட்களில் மட்டும் 26 கோடி ரூபாய்க்கும் அதிமான வருமானம் கிடைத்துள்ளது. திருமலை திருப்பதி கோவிலின் ஆகம விதிப்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 பிரம்மோற்சவங்கள் நடக்கும், 2015-ம் ஆண்டிற்குப் பிறகு இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. பிரதான பிரம்மோற்சவம் முடிந்த நிலையில், அக்டோபர் 10-ம் தேதி, நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறவுள்ளது.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.