ரபேல் விவகாரத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், பிரதமர் மோடி மீது வழக்குப்பதிவு செய்ய போதிய ஆதாரம் உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ரபேல் போர் விமான கொள்முதல் முறைகேடு புகாரில் விசாரணை நடத்த தேவையில்லை என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்யக்கோரி மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ராணுவ அமைச்சகத்திடம் இருந்த 36 ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான அதிமுக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன என்றார்.

Illustration by Mir Suhail/News18.com
இந்த செயலில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனக்கூறிய அவர், திருடப்பட்ட ஆவணங்களே மனுதாருக்கும், இந்து நாளிதழுக்கும் கிடைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
அதனால் அவர்கள் மீது சட்டப்படி கிரிமினல் வழக்கு தொடர அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். ரகசிய ஆவணங்களை பத்திரிகையில் வெளியிட்டது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என வாதிட்ட கே.கே.வேணுகோபால், இப்படி நடந்தால் இனி ராணுவத் தளவாடங்களை விற்க மற்ற நாடுகள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கும் நிலை வரும் என்றும் கூறினார்.
இந்த ஆவணங்களின் அடிப்படையில் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரங்களை நீதிமன்றம் ஏற்கக் கூடாது என்றும் அவர் வாதிட்டார்.
சில விஷயங்கள் நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வரக் கூடாது என குறிப்பிட்டதோடு, எல்லா விஷயங்களுக்கும் நாங்கள் நீதிமன்றத்திற்கு வந்து அனுமதி வாங்க வேண்டுமா? என கே.கே.வேணுகோபால் வினவினார்.

ரஃபேல் விமானம்
அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஜோசப், போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்திலும் ஊழல் என குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கிலும் ஆவணங்களை கவனத்தில் கொள்ளக் கூடாது என கூறுவீரர்களா? என பதில் கேள்வி கேட்டார்.
பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ள ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சரிபார்க்காமல் இருக்க முடியாது என்றும் நீதிபதி ஜோசப் சுட்டிக்காட்டினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், திருடப்பட்ட ஆவணங்கள் மற்றும் அதன் மீது எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதற்கிடையே, ரபேல் ஊழல் விவகாரம் தொடர்பாக, ஆவணங்களை நாங்கள் திருடவில்லை எனவும், நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என்ற நோக்கில்தான் நாங்கள் ஆவணங்களை வெளியிட்டோம் என்றும் இந்து பத்திரிகை குழும நிர்வாகி என்.ராம் கூறினார்.

ராகுல் காந்தி
ரபேல் கொள்முதலில் பிரதமர் மீது வழக்கு பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உச்சநீதிமன்றத்தில் ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பான ஆவணங்கள் திருடு போய்விட்டன என்று மத்திய அரசு கூறுவது பொய் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் உள்ள ஆவணங்களை அழிப்பதும் அதன் மூலம் தடயங்களை மறைப்பதும் தான் மத்திய அரசின் நோக்கம் என்றும் ராகுல் காந்தி சாடினார்.
Also See...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.