தங்கப் பேராசை... கோலார் சுரங்கத்தில் திருட முயற்சித்து உயிரிழந்த மூன்று பேர்...!

சுரங்கத்தில் கொள்ளையடிப்பது படத்தில் மட்டுமே சாத்தியம். நடைமுறையில் அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை உணராத கும்பல் தற்போது போலீசாரின் வலையில் வசமாக சிக்கியுள்ளது.

  • Share this:
ஊரடங்கை பயன்படுத்தி, கோலார் தங்கச் சுரங்கத்திற்குள் திருடச்சென்ற ஆறுபேரில் மூவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தோஷ் என்ற படையப்பா, ஸ்கந்தா, ஜோசப், விக்ரம், விக்டர், ரிச்சர்டு ஆகிய 6 பேர் கோலார் பகுதியைச் சேர்ந்தவர்கள். கொள்ளையடிக்கும் தொழில் செய்து வரும் இவர்கள், ஊரடங்கை பயன்படுத்தி பெரியளவில் கொள்ளையடிக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளனர்.

வெளியில் சென்று கொள்ளையடித்தால் சிக்கிக் கொள்வோம் என்பதால், பாதுகாப்பின்றி இருக்கும் கோலார் தங்க சுரங்கத்தில் இறங்கி தங்கம் மற்றும் இரும்பு கனிமங்களை கொள்ளையடிக்கலாம் என வியூகம் வகுத்துள்ளனர்.


புதன் கிழமை இரவு ஆறு பேரும் பைக்கில் கோலார் மரிக்குப்பம் தங்க வயலுக்குள் சென்றுள்ளனர். கும்மிருட்டு என்பதால், தலையில் டார்ச் லைட் கட்டியபடி, கயிறு, கத்தி, தங்க கனிமத்தை எடுக்க சாக்குப் பைகள் ஆகியவற்றுடன் சென்றுள்ளனர்.

2,782 அடி ஆழம் கொண்ட தங்கச் சுரங்கத்திற்குள் கயிறு கட்டி இறங்க முடிவு செய்தனர். முதலில், ஸ்கந்தன், ஜோசப் ஆகிய இருவரும் இறங்கியுள்ளனர். ஆயிரம் அடி இறங்கினால் தங்கம் கிடைக்கும் என்ற பேராசையில், சில அடி ஆழம் இறங்கிய இவருவரையும் திடீரென காணவில்லை. அவர்களை காணவில்லை என்பதால், படையப்பா கயிற்றைப் பிடித்து சுரங்கத்திற்குள் மூன்றாவதாக இறங்கியுள்ளார்.

இறங்கிய ஸ்கந்தன், ஜோசப், படையப்பா ஆகிய மூவரும் ஆக்ஜிசன் குறைவால், மூச்சுத்திணறி, சுரங்கத்திற்குள்ளேயே விழுந்துள்ளனர். பதறிப்போன ரிச்சர்ட் உடனே பைக்கில் கிளம்பிச் சென்று, விபத்து நடந்த தகவலை சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இரவு 11 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரும், தீயணைப்பு துறை வீரர்களும், கயிறு கட்டி சுரங்கத்திற்குள் சென்று ஆய்வு செய்தனர். அதில், சுமார் 100 அடி ஆழத்தில் கிடந்த ஸ்கந்தன், ஜோசப் ஆகியோரது உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சுரங்கத்திற்குள் காணாமல் போன படையாப்பாவின் உடலை மீட்புக் குழுவினர் முகாமிட்டு தேடிவருகிறார்கள்.

பெங்களுருவில் இருந்து அதிநவீன கேமராக்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் தொடர்ந்து ஆய்வு செய்யும் பணி நடந்துவருகிறது. கோலார் தங்க வயலின் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவர்கள் இந்தக் கும்பலுக்கு உதவினார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்துவருகிறது.

ஜோசப் மனைவி, சங்கீதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கும்பலுக்கு இது முதல் முயற்சி அல்ல; ஏற்கனவே மைசூர் சுரங்கத்திலும் இக்கும்பல் கொள்ளை முயற்சியிலும் இறங்கியதும் தெரியவந்துள்ளது. இப்போது உயிரிழப்பு நடந்துள்ளதால், இவர்களது கொள்ளைத் திட்டம் அம்பலமாகியுள்ளது

கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

போதிய தங்கம் கிடைக்கவில்லை, லாபகரமாக இல்லை என்பதால் கடந்த 2001 -ம் ஆண்டு கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டது. மூடப்பட்ட பிறகு, சுரங்கத்தில் உள்ள தங்க தாதுக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து உள்ளூர் போலீசார் 10க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு கும்பல் தொடர்ந்து தங்க தாதுக்களை திருட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முறை மூவரை அந்த சுரங்கம் காவு வாங்கியுள்ளது என்கிறார்கள் அப்பகுதியினர்.

சுரங்கத்தில் கொள்ளையடிப்பது படத்தில் மட்டுமே சாத்தியம். நடைமுறையில் அவ்வளவு எளிதான காரியமில்லை என்பதை உணராத கும்பல் தற்போது போலீசாரின் வலையில் வசமாக சிக்கியுள்ளது.


Also see...
First published: May 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading