பாராளுமன்றத்தில் பெண் எம்.பி-க்கு சிவசேனா எம்.பி பகிரங்க மிரட்டல்?

சுயேட்சை பெண் எம்பி நவ்னீத் கவுர்

உத்தவ் தாக்கரே குறித்து இனி பேசினால் உன் முகத்தில் ஆசிட் அடித்து எங்கும் சென்றுவிடாமல் செய்துவிடுவோம்” என கடிதத்தில் நவ்னீத் கவுர் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
நடிகையும், மகாராஷ்டிராவின் சுயேட்சை பெண் எம்பியுமான நவ்னீத் கவுர், சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தன்னை பாராளுமன்றத்திலேயே மிரட்டியதாக கூறி அதிர வைத்திருக்கிறார்.

கருணாஸுடன் இணைந்து நகைச்சுவை படம் ஒன்றில் நடித்து தமிழகத்திலும் அறியப்படும் நடிகையாக விளங்கியவர் நவ்னீத் கவுர். பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வரும் நவ்னீத் பின்னாட்களில் அரசியலில் கால்பதித்து மகாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றார்.

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், காவல்துறை தனக்கு மாதம் மாதம் 100 கோடி ரூபாய் தர வேண்டும் என அழுத்தம் தந்ததாக சமீபத்தில் உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தது மகாராஷ்டிராவில் புயலை கிளப்பியது. இந்த விவகாரத்தை பாராளுமன்றத்தில் எம்.பி நவ்னீத் கவுர் எழுப்பினார். இதன் பிறகு சிவசேனா எம்.பி அரவிந்த் சாவந்த் தன்னிடம் பாராளுமன்ற நடைபாதை பகுதியில் வைத்து மிரட்டியதாக பெண் எம்.பி நவ்னீத் கவுர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்துள்ளதாகவும், காவல்நிலையத்திலும் புகார் அளித்திருப்பதாகவும் நவ்னீத் கவுர் கூறியுள்ளார்.

மார்ச் 22ம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் அளித்திருக்கும் எழுத்துப்பூர்வ புகாரில், இன்று பாராளுமன்றத்தில் மகாராஷ்டிர அரசுக்கு எதிராக தான் பேசியதால் கோபமடைந்த எம்.பி அரவிந்த் சாவந்த், மகாராஷ்டிராவுக்குள் நீ எப்படி சுந்ததிரமாக நடமாடுகிறாய் என பார்த்துவிடுகிறேன். உன்னை ஜெயிலில் அடைத்து விடுவோம். இதன் காரணமாக நான் கடுமையாக அதிர்ச்சி அடைந்து திகைத்து நின்றேன். உடனடியாக என் பின்னே நின்றுகொண்டிருந்த ராஜமுந்திரி எம்.பி பாரத் மார்கனியிடன் அவர் என்ன கூறுகிறார் என்று கேட்டீர்களா என கேட்டேன். ஆம் நானும் கேட்டேன் என்று அவர் எனக்கு பதிலளித்தார்.

எனக்கு சிவசேனாவின் லெட்டர் பேடில் எழுதிய கடிதங்கள் வருகின்றன. தொலைபேசி அழைப்புகளிலும் மிரட்டல்கள் வருகின்றன. உன் அழகான முகத்தினால் பெருமைப்பட்டுக்கொண்டிருக்கிறாய், உத்தவ் தாக்கரே குறித்து இனி பேசினால் உன் முகத்தில் ஆசிட் அடித்து எங்கும் சென்றுவிடாமல் செய்துவிடுவோம்” என கடிதத்தில் நவ்னீத் கவுர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் என்னை மிரட்டியிருப்பது எனக்கு மட்டும் அவமானம் அல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பெண்களுக்குமான அவமானம் என்று கூறியுள்ளார்.

இதனிடையே நவ்னீத் கவுரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எம்.பி அரவிந்த் சாவந்த், நான் யாரையும் மிரட்டவில்லை, இது முற்றிலும் பொய். சிலர் விளம்பரத்திற்காக நடக்காதவற்றை திரித்து கூறுகின்றனர் என்றார். அதே நேரத்தில் யாராவது அவர் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்படும் என கூறியிருந்தால் அது கண்டனத்திற்குரியது. யாரும் அப்படி செய்யக் கூட நினைக்கக் கூடாது. இந்த விஷயத்தில் நான் நவ்னீத் கவருக்கு ஆதவராக நிற்பேன் என்றார்.
Published by:Arun
First published: