Home /News /national /

இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம்... பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருத்து

இலவசங்கள் வழங்கும் கலாச்சாரம்... பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என மத்திய அரசு கருத்து

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு தற்போது உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    இலவசங்களை வழங்குவது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாத பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் சாத்தியமற்ற இலவசங்களை அறிவிப்பது லஞ்சம் வழங்குவதற்கு சமம். இது வாக்காளர்களை மறைமுகமாக நிர்பந்திக்கும் செயல். அதனால், அரசியல் கட்சிகள் இலவசங்களை ஒழுங்குப்படுத்துவது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்து பொதுநல வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசின் புதிய நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது, ஏனெனில் இலவசங்கள் தொடர்பான பிரச்சினையை தேர்தல் ஆணையம் தான் கையாள வேண்டும் என்று முன்பு மத்திய அரசு கூறியிருந்தது.

    இதுதொடர்பாக பதிலளித்த தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 26ம் தேதி நடந்த விசாரணையின்போது, மத்திய அரசின் மீது பொறுப்பை சுமத்தியது.

    இதைத்தொடர்ந்து, மத்திய அரசு, நிதி ஆயோக், இந்திய ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குமாறு தற்போது உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஜனவரி 22: தேர்தலுக்கு முன் பொதுநிதியில் இருந்து இலவசங்களை வழங்குவது வாக்காளர்களை பாதிக்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் வேர்களை உலுக்கி, சமநிலையை சீர்குலைக்கும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் கூறப்பட்டதாவது: இலவசங்கள் வழங்கும் அரசியல் கட்சிகளின் முடிவுகள் அரசியலமைப்பின் 14, 162, 266 (3) மற்றும் 282 ஆகிய பிரிவுகளை மீறுவதாகக் கூறி, பாஜக தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்களை கைப்பற்றி, பொது நிதியில் இருந்து இலவசங்களை விநியோகிப்பதாக வாக்குறுதி அளித்த அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை ரத்து செய்ய வேண்டும். அரசியல் கட்சிகள் தன்னிச்சையாக தவறான ஆதாயத்திற்காகவும், வாக்காளர்களை தங்களுக்குச் சாதகமாக ஈர்ப்பதற்காகவும் பகுத்தறிவற்ற இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இது லஞ்சம் மற்றும் தேவையற்ற தாக்கங்களுக்கு ஒப்பானது. மேலும், விரைவில் ஒரு கட்சி உங்களுக்காக உங்கள் வீட்டில் நாங்கள் வந்து சமைப்போம் என்றும், மற்றொரு கட்சி, நாங்கள் உங்களுக்காக சமைத்து கொடுப்பதோடு, ஊட்டியும் விடுவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்க நேரிடும் காலம் மிக தொலைவில் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    ஜனவரி 25: அரசியல் கட்சிகள் பொது நிதியில் இருந்து இலவசங்கள் வழங்குவதாக வாக்குறுதி அளிப்பதையோ அல்லது விநியோகிப்பதையோ தடுக்க தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை உருவாக்க கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

    ஆகஸ்ட் 3:  மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த பொதுநல மனுவை மத்திய அரசு ஆதரிப்பதாக தெரிவித்தார். இத்தகைய ஜனரஞ்சகமான வாக்குறுதிகள் வாக்காளர்களுக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இது எதிர்காலத்தில் பொருளாதார பேரழிவுக்கு வழிவகுக்கும் என்பது மட்டுமல்லாமல், வாக்காளர்கள் தங்களது சுயமுடிவை எடுக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியாது என்று அவர் கூறினார்.

    மேலும்,இதுபோன்ற இலவசங்களை ஏற்றுக்கொள்ளும் போது, ஒரு சாமானியர் தனது வலது பக்க பாக்கெட்டில் பெறுவது, பின்னர் அவரது இடது பக்க பாக்கெட்டிலிருந்து எடுக்கப்பட போகிறது என்பதை ஒருபோதும் உணரமாட்டார்கள், என்று மேத்தா கூறினார். ஜனநாயகத்தை பாதுகாப்பது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கவும் இதுபோன்ற இலவச கலாச்சாரத்தை தேர்தல் குழு தடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Supreme court

    அடுத்த செய்தி