• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்த ஒன்றுக்கு மட்டும்தான் மோடி பயப்படுகிறார் : ப.சிதம்பரம் கிண்டல்

இந்த ஒன்றுக்கு மட்டும்தான் மோடி பயப்படுகிறார் : ப.சிதம்பரம் கிண்டல்

வேளாண் சட்டங்கள் தவறு, அரசின் முடிவு தவறு, பல நூறு விவசாயிகள் இறந்ததற்கு அரசு மன்னிப்புக் கேட்கிறது என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவர் மனமும் எண்ணமும் உண்மையில் மாறி இருக்கின்றன என்று ஏற்றுக்கொள்ளலாம் : ப.சிதம்பரம்

  • Share this:
    மத்திய அரசின் புதிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனை சுட்டிக்காட்டி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது.

    3 புதிய வேளாண் சட்டங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தங்களுக்கு எதிராக இருப்பதாக கூறி விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீப காலத்தில் இந்தியாவில் நடந்த மிகப்பெரும் போராட்டமாக இது கருதப்படுகிறது.

    போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த 3 சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மத்தியில் மோடி அரசு கொண்டு வந்த சில சட்டங்கள் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளன. இதில் முதன்முறையாக, தாங்கள் கொண்டு வந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மோடியின் அறிவிப்பு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

    பா ஜ க தலைவர் ஒருவர் கூறினார், விவசாயிகளின் நலனுக்காக வேளாண் சட்டங்களை இயற்றினார்களாம், தேச நலனுக்காக அந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுகிறார்களாம். மக்களை எவ்வளவு ஏமாளிகள் என்று பா ஜ க கருதுகிறது என்று பாருங்கள்...

    விவசாயிகள் நலன் வேறு தேச நலன் வேறு என்பதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

    இந்திய விவசாயிகள் அந்நியர்கள் அல்லது இந்திய விவசாயிகள் எதிரிகள் என்று பா.ஜ.க. வினர் கருதுகிறார்களா?

    வேளாண் சட்டங்கள் தவறு, அரசின் முடிவு தவறு, பல நூறு விவசாயிகள் இறந்ததற்கு அரசு மன்னிப்புக் கேட்கிறது என்று பிரதமர் சொல்லியிருந்தால் அவர் மனமும் எண்ணமும் உண்மையில் மாறி இருக்கின்றன என்று ஏற்றுக்கொள்ளலாம். அப்படிச் சொல்லவில்லையே?

    எதிர்வரும் 5 மாநிலத் தேர்தலில் பா ஜ க தோல்வி அடைவது உறுதி என்று தெரிந்த பிறகல்லவா வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அரசு அறிவித்தது?

    யாருக்கும் அஞ்சாத பிரதமர், நல்லவேளை தேர்தல் தோல்விக்கு அஞ்சுகிறார். ஜனநாயகம் பிழைத்து விடும் என்று இனி நம்பலாம்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முறையாக வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அதுவரையில் தங்கள் போராட்டம் தொடரும் என்றும் விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Musthak
    First published: