ஹோம் /நியூஸ் /இந்தியா /

புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயல் - சமூக அமைப்புகள் கூட்டறிக்கை

புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறப்பது ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயல் - சமூக அமைப்புகள் கூட்டறிக்கை

மது (கோப்புப்படம்)

மது (கோப்புப்படம்)

”அண்டை மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளன.”

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறப்பது குறித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கருத்தறிந்து முடிவெடுக்க வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளன.

  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது, ”புதுச்சேரி ஒன்றியத்து ஆட்சிப் பகுதியில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு தடைச் சட்டம் அமுலில் இருந்தது. இந்நிலையில், கடந்த 04.05.2020 அன்று ஊரடங்கை புதுச்சேரி அரசு தளர்த்தியுள்ளது. இதனால் இயல்பான நிலையைவிட கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நகரின் வீதிகளில் சமூக விலகல் மற்றும் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி ஒரே நேரத்தில் குவிந்தனர். புதுச்சேரி அரசு தற்போது வரையிலும் ஊரடங்கைத் தளர்த்தினாலும் சமூக விலகல் உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றாதது கவலைக்குரியதாகும்.

  இத்தகைய சூழலில் புதுச்சேரியில் மதுபானக் கடைகளை அரசு திறப்பது மேலும் ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் செயலாகும். அரசின் மதுக் கொள்கை ஏற்கனவே வயது வரம்பின்றி விற்பனைச் செய்யும் கொள்கையாக உள்ளது. இதனால் மது விற்பனை என்பது புதுச்சேரியின் கலாச்சார நடைமுறையாக மாறிவிட்டது.

  புதுச்சேரி ஆட்சிப் பரப்பில் மதுவிலக்கு முழுமையாகத் தளர்த்தப்பட்ட மாநிலம் என்பதால் தமிழகப் பகுதிகளில் இருந்து அதிகளவில் இங்கு மதுப் பிரியர்கள் வருவது நடைமுறையில் உள்ளது. தற்போது புதுச்சேரியின் அண்டை மாவட்டங்களான விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்றினால் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாறியுள்ளன.

  மேற்கண்ட மாவட்டங்களில் இருந்து பல்வேறு குறுக்குப் பாதைகள் மற்றும் வயல்வெளிப் பாதைகள் வழியாக புதுச்சேரி பகுதி மதுபானக் கடைகளுக்கு மது அருந்த மக்கள் வந்தால், புதுச்சேரியில் அபாயகரமான நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரிடும்.

  மேலும், புதுச்சேரி அரசு தற்போதுள்ள நோய்த் தொற்று நெருக்கடி தருணத்தில் மதுக் கடைகள் திறப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவெடுக்க வேண்டுமெனவும் புதுச்சேரி அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.”

  இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see:

  Published by:Rizwan
  First published:

  Tags: Narayana samy, Puducherry