"இந்த வீடு ஏற்கனவே கொள்ளையடிக்கப்பட்டது" - வீட்டுக் கதவில் திருடர்களுக்கு செய்தி எழுதி வைத்த கிராம மக்கள்!

ஒரே நேரத்தில் அவர்கள் பல வீடுகளை குறிவைத்தனர். சட்டரீதியாக இது ஒருங்கிணைந்த குற்றச் செயல் என்று அழைக்கப்படுகிறது

  • Share this:
ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில் திருடர்களின் அட்டூழியம் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் தங்களின் மீதமுள்ள பொருட்கள் மற்றும் நகைகளை தக்க வைத்துக்கொள்ள ஒரு புதிய வழியைக் கொண்டு வந்துள்ளனர். இப்போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் பலர் தங்கள் வீட்டுக் கதவுகளில் ஒரு செய்தியை எழுதத் தொடங்கியுள்ளனர். அதாவது, "இந்த வீடு ஏற்கனவே இலக்கு வைக்கப்பட்டது. தயவுசெய்து உங்கள் முயற்சிகளை வீணாக்காதீர்கள்" என்று எழுதி வைத்துள்ளனர்.

இப்பகுதியில் சூறையாட வரும் திருடர்கள் கடந்த 10 நாட்களில் சுமார் ஒரு டஜன் வீடுகளில் திருட்டுகளை நடத்தியுள்ளனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால், 12 வீட்டில் திருட்டு சம்பவம் நடந்திருந்தாலும் திருடர்கள் கும்பல் காவல்துறையின் பிடியில் இன்னும் சிக்கவில்லை என்பது தான். ஜார்க்கண்டின் தலைநகரான புண்டாக் பகுதியில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவம் அதிகரித்து வருவதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மேலும், இந்த சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை(ஜூன் 12) இரவு, இந்த திருட்டு கும்பல் அப்பகுதியில் மீண்டும் அட்டூழியத்தை ஆரம்பித்தது. ஒரே நேரத்தில் அவர்கள் பல வீடுகளை குறிவைத்தனர். சட்டரீதியாக இது ஒருங்கிணைந்த குற்றச் செயல் என்று அழைக்கப்படுகிறது. அன்று தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்த கும்பல் முதலில் அப்பகுதியில் வசிக்கும் ஜிதேந்திர சிங் என்பவரின் வீட்டிற்குள் புகுந்து நகைகள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றனர். ஜிதேந்திர சிங் கல்வித்துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சில திருடர்கள் வாடகை வீட்டில் வசிக்கும் மனோஜ் அகர்வாலின் வீட்டிலும் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.

அதே சனிக்கிழமை இரவு, மனோஜ் வீட்டிற்கு அருகில் வசிக்கும் சஞ்சீவ் குமார் கண்ணாவின் வீட்டிலும் திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான புகார்கள் புண்டாக் ஓ.பி.க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி இதுபோன்ற திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் எங்கள் வீடு ஏற்கனவே சூறையாடப்பட்டது. எனவே தயவு செய்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என திருடர்களுக்கு ஒரு வேண்டுகோள் செய்தியையும் அப்பகுதி மக்கள் எழுதியுள்ளனர்.

திருட்டு சம்பவங்கள் நம் நாட்டில் அசாதாரணமானது அல்ல என்றாலும், குற்றவாளிகளுக்கே கோரிக்கை வைப்பது போன்ற செய்திகளை எழுதி வருவது சற்று விசித்திரமாக உள்ளது. இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்கள் திருடர்களுக்கு எந்தளவு பயப்படுகிறார்கள் என்பதும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. இந்த திருட்டு கும்பலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை காவல்துறையினர் எடுக்காவிட்டால் நிலைமை மிகவும் மோசமானதாகி விடும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: