தீபாவளி வந்தாலே எல்லா தரப்பு மக்களுக்கும் மிகப் பெரிய கொண்டாட்டம் தொடங்கி விடும். இனிப்பு பலகாரங்கள், புத்தாடைகள், தீபாவளி பரிசு பொருட்கள் போன்றவற்றை நமது அன்புக்குரியவர்களுக்கு தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் நாம் வாங்கி தருவது வழக்கம். அதிலும் அலுவலகத்தில் பணிபுரிவோர்களுக்கு தீபாவளி என்றாலே 'தீபாவளி போனஸ்' தான் நினைவுக்கு வரும். பல காலமாக தீபாவளிக்கு போனஸ் தரும் பழக்கம் பல்வேறு நிறுவனங்களில் இருந்து வருகிறது. சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பரிசு பொருட்கள், இனிப்பு வகைகளுடன் தீபாவளி போனஸையும் தனது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கி வருகின்றன.
சில நிறுவனங்கள் பணமாக இல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள், புது துணிகள், எலக்ட்ரானிக் கேட்ஜட் போன்றவரை தீபாவளி பரிசாக வழங்குகின்றன. அந்த வகையில் சூரத்தை சேர்ந்த அலையன்ஸ் குரூப் நிறுவனம் புதுவிதமான பரிசு ஒன்றை தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் சுற்றுசூழலுக்கு நன்மை தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தீபாவளி பரிசாக தனது 35 ஊழியர்களுக்கு இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
Also read:
வாகன விபத்து இழப்பீடு கோரிக்கைகள் இனி 3 மாதங்களில் செட்டில் – வருடக்கணக்கில் காத்திருப்புக்கு முடிவு!
இந்த அலையன்ஸ் குரூப் நிறுவனம் எம்பிராய்டரி மெஷின்களை தயாரித்து வருகிறது. இவர்கள் அளித்த தீபாவளி பரிசு நிச்சயம் இந்த 35 ஊழியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்திருக்கும். இவர்களுக்கு பரிசாக அளித்த ஒக்கினோவா பிரைஸ்ப்ரோ (Okinawa PraisePro) எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.76,848 ஆகும். தனது ஊழியர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தீபாவளி பரிசாக வழங்கியதன் நோக்கம் என்ன என்பதை அலையன்ஸ் குரூப் நிறுவனத்தின் தலைமை அதிகாரி வியாழன்கிழமை நடந்த நிகழ்வில் இது குறித்து பேசியுள்ளார்.
அப்போது, "பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இதனால் பெட்ரோலுக்கு செலவு செய்யப்படும் பணத்தை பெரிதும் மிச்சப்படுத்தலாம். மேலும் இவை சுற்றுசூழலுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படத்தாதவை. எனவே தான் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் 35 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக வழங்க முடிவு செய்தோம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Also read:
பணத்துக்காக மகளை விபச்சார கும்பலுக்கு விற்பனை செய்த காதலனை கொலை செய்து பழிதீர்த்த தந்தை – நெட்டிசன்கள் பாராட்டு!
இந்த ஒக்கினோவா பிரைஸ்ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.0 kWh லித்தியம்-ஐயான் பேட்டரி தரப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள BLDC மோட்டாரை செயல்பட வைக்க 1000 Watt பேட்டரி பேக் அப் உதவுகிறது. அதிகபட்ச வேகமாக ஒரு மணி நேரத்திற்கு 58 (kmph) கிலோமீட்டர் வரை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் செல்லும். எளிதில் சார்ஜ் செய்ய இதில் மைக்ரோ சார்ஜர் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 3 மணி நேரம் வரை இந்த ஸ்கூட்டரை பயன்படுத்தலாம்; அதாவது 88 கிலோ மீட்டர் வரை செல்லலாம். பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்கும் நிலையில், வரும் காலங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தேவை அதிகரிக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.