கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்த சோகம்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கல பகுதியில் செருன்னியூர் என்ற இடத்தில் ராகுல் நிவாஸ்-ல் பேபி என்ற பிரதாபன் (வயது 62) வசித்து வருகிறார். இவர் வர்க்கல பகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் வர்க்கல தீயணைப்பு துறையினர் மற்றும் வர்க்கல போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதோடு வீட்டினுள்ளில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் மேற்கொண்டனர். ஆனால் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்ட இந்த தீ விபத்து காரணமாக வீட்டினுள்ளில் தூங்கி கொண்டிருந்த காய்கறி வியாபாரம் நடத்தி வரும் பிரதாபன் 62, மனைவி ஷெர்லி 53, மருமகள் அபிராமி 25, இளைய மகன் அகில் 29, மற்றும் 8 மாத குழந்தை உட்பட 5 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பிரதாபனின் மூத்த மகன் நகுல் என்பவரை தீயகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதிகாலை 5 மணிக்கு விபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணம் தீ விபத்து என முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. வீட்டின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 மாத குழந்தை உட்பட 5 பேர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: சஜயகுமார் (கன்னியாகுமரி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.