பக்தர்கள் வரத்து குறைவால் வெளிவரும் வனவிலங்குகள்: சென்சார் கேமராக்கள் பொருத்திய திருப்பதி நிர்வாகம்
பக்தர்கள் வரத்து குறைவால் வெளிவரும் வனவிலங்குகள்: சென்சார் கேமராக்கள் பொருத்திய திருப்பதி நிர்வாகம்
திருப்பதி - கோப்புப் படம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வரத்து குறைந்ததால் வனப்பகுதியிலிருந்து வெளியேவரும் விலங்குகளை கண்காணித்து விரட்ட அதிநவீன சென்சார் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாக கடவுளை தரிசிக்கவும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. இதனால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதிக்கு முன் தினமும் ஒரு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வந்து சேரும் திருப்பதி மலைக்கு தற்போது தினமும் 13 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே வருகின்றனர். இதனால் இதற்கு முன்னர் எப்போதும் பக்தர்கள் கூட்டம், வாகனப் போக்குவரத்து ஆகியவற்றுடன் கலகலப்பாக காணப்பட்ட திருப்பதி மலை மற்றும் திருப்பதி மலைக்கு செல்ல பயன்படுத்தப்படும் பாதைகள் ஆகியவை தற்போது வெறிச்சோடி விட்டன.
இதனால் திருப்பதி மலையை சுற்றி இருக்கும் சேஷாசலம் வனப்பகுதி காடுகளில் வசிக்கும் சிறுத்தை, கரடி, மலைப்பாம்புகள், மான்கள் ஆகியவை போன்ற வனவிலங்குகள் இரவு நேரத்தில் திருப்பதி மலைக்கு தினமும் வந்து செல்கின்றன.
திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் பகுதியான பத்மாவதி விருந்தினர் மாளிகை பகுதி, திருப்பதி மலையில் மடங்கள், சத்திரங்கள் ஆகியவை அமைந்திருக்கும் பகுதிகள், திருப்பதி மலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை சமீபத்திய பகுதிகள் ஆகியவற்றிற்கு வனவிலங்குகள் தினமும் இரவு நேரத்தில் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.
எனவே வன விலங்குகளால் பக்தர்களுக்கு ஏதாவது ஒருவகையில் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆலோசனை செய்த தேவஸ்தான நிர்வாகம், வன விலங்குகள் அடிக்கடி வந்து செல்லும் பகுதிகளில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சென்சார்கள் இணைக்கப்பட்ட கேமராக்களை பொருத்தி உள்ளது.
சிறுத்தை, கரடி, மலைப்பாம்புகள் ஆகியவை போன்ற ஆபத்தான விலங்குகள் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள பகுதிக்குள் நுழையும்போது, கேமராவில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சாரில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கிடைக்கும்.
கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருக்கும் ஊழியர் தன்னுடைய இருக்கையில் இருந்தபடியே பொத்தானை அழுத்தினால், கேமராவில் இருந்து வன விலங்குகள் மீது ஒளி வெள்ளம். இதனால் வனவிலங்குகள் அங்கிருந்து ஓடி விடும்.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருப்பதி மலைக்கு வந்து இரவு நேரங்களில் நடமாடும் வனவிலங்குகளை தேவஸ்தானம் விரட்டி வருகிறது. பெரும்பாலும் அதிகாலை நேரங்களில் திருப்பதி மலையில் காட்டேஜ்கள் இருக்கும் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் தொடங்குகிறது. எனவே 3:00 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் எச்சரிக்கையுடன் நடனமாடுவது பாதுகாப்பானதாக இருக்கும்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.