விமான நிலையங்களை தனியார்வசம் ஒப்படைக்கும் 3-வது கட்டத்தை தொடங்கியது மத்தியஅரசு! 

ஏர் இந்தியா விமானம்

6 முதல் 10 விமான நிலையங்களை 3வது கட்டமாக தனியார் வசம் ஒப்படைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

  • Share this:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றதில் இருந்து, நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் தனியார் பங்களிப்பை அதிகளவில் ஊக்குவித்து வருகிறது. ரயில்வே, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறையிலும் விரைவில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் நடைமுறையையும் 2018-ம் ஆண்டில் தொடங்கியது. ஏற்கெனவே கவுகாத்தி, திருவனந்தபுரம், அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் மங்களூர் ஆகிய விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் பராமரிப்பு பணிக்காக குத்தகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

இரண்டு கட்டமாக தனியார் வசம் ஒப்படைக்கும் நடைமுறை நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது 3 வது கட்ட நடைமுறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த முறை 6 முதல் 10 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதுகுறித்து பேசிய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் செயலாளர் பிரதீப் சிங் கரோலா (Pradeep Singh Kharola), மூன்றாவது கட்ட பணிகளை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். அதற்காக, நாடு முழுவதும் இருக்கும் விமான நிலையங்களை வகைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அவர், இந்த முறை லாபம் கொடுக்கும் விமான நிலையங்களையும்,  நஷ்டத்தில் இயங்கும் விமானநிலையங்களையும் இணைத்து பேக்கேஜ்ஜாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

6 முதல் 10 விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பிரதீப் சிங் கரோலா தெரிவித்தார். உள்நாட்டு விமான சேவைகள் 80 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தை நிலவரத்தை கணக்கில் கொண்டு டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்படுதாக கூறினார். கொரோனா வைரஸ் பரவலின் நிலைமையை ஆராய்ந்து பன்னாட்டு விமான போக்குவரத்து சேவையை விரைவில் தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக கரோலா கூறினார்.

பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (AAI) மூலம் டையர் 2 மற்றும் 3 நகரங்களில் நிர்வாகம் செய்யப்படும் விமான நிலையங்களை தனியார் வசம் ஒப்படைக்க உள்ளதாகவும், ஏர் இந்தியாவை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே, 2021-22 -ம் ஆண்டு விமான நிலையங்களை நிர்வகிப்பதற்கான மூலதன செலவுகளுக்கு 2,100 கோடி ரூபாயை வங்கிகளிடம் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published by:Ram Sankar
First published: