ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையிலான திருட்டு: திருடுவதற்காகவே ரூ.90 லட்சத்தில் வீடு வாங்கிய கொள்ளையர்கள்!

ஹாலிவுட் படங்களை மிஞ்சும் வகையிலான திருட்டு: திருடுவதற்காகவே ரூ.90 லட்சத்தில் வீடு வாங்கிய கொள்ளையர்கள்!

காவல்துறை

மருத்துவர் சோனியின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டை சில மாதங்களுக்கு முன்னதாக 90 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிய திருடர்கள், அந்த இடத்தை பார்க்க முடியாதவாறு திரையிட்டு மறைத்துள்ளனர். அங்கிருந்து மருத்துவர் சோனியின் வீடு வரை 20 அடி நீளம், 15 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளனர்.

  • Share this:
மருத்துவர் ஒருவரின் வீட்டில் இருந்து கிலோ கணக்கிலான வெள்ளியை திருடுவதற்காகவே முன் கூட்டியே திட்டமிட்டு அருகில் உள்ள வீட்டை 90 லட்ச ரூபாய்க்கு திருடர்கள் வாங்கியிருக்கும் அதிர்ச்சிகர சம்பவம் ஜெய்ப்பூரில் அரங்கேறியுள்ளது.

டாக்டர் ஒருவரின் வீட்டில் இருந்த வெள்ளியை திருடுவதற்காக அவருடைய வீட்டின் அருகாமையில் உள்ள வீட்டினை 90 லட்ச ருபாய் விலை கொடுத்து சொந்தமாக வாங்கி, அங்கிருந்து சுரங்கம் தோண்டி கொள்ளையடித்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்படும் போதே சிலிர்க்க வைக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையிலான இது போன்ற கொள்ளை சம்பவம் எல்லாம் சாத்தியமா என்றால் ஆம் அதுவும் நம்ம ஊரில் தான் என்று தான் சொல்லியாக வேண்டியுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா நகரமான ஜெய்பூரில் உள்ள வைஷாலி நகரைச் சேர்ந்தவர் சுனித் சோனி, அதே பகுதியில் முடி மாற்று சிகிச்சை மையம் வைத்து நடத்தி வருகிறார். மருத்துவர் சோனி தன்னுடைய வீட்டில் இருந்த பெரும் அளவிலான வெள்ளியை, அருகில் இருந்த வீட்டின் உரிமையாளர்கள் சுரங்கம் தோண்டி கொள்ளையடித்து விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் உடனடியாக களத்தில் இறங்கி விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஹாலிவுட்டின் சாகச படங்களை மிஞ்சும் வகையில் உள்ளது.

மருத்துவர் சோனி கடந்த பிப்ரவரி 24ம் தேதியன்று தனது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள தரை சமம் இல்லாமல் இருந்ததை கண்டார். அதனை பார்த்த போது தான் அது ஒரு சுரங்கம் என்பது அவருக்கு தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினரின் விசாரணையில் சோனிக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான நபர் மூலமாக தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கும் என நம்பினர். ஏனெனில் சோனிக்கு மட்டுமே அவர் வீட்டின் தரைத்தளத்தில் வெள்ளியை பெரிய பெட்டியில் வைத்திருந்தது தெரியும்.

மருத்துவர் சோனியின் வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டை சில மாதங்களுக்கு முன்னதாக 90 லட்ச ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்கிய திருடர்கள், அந்த இடத்தை பார்க்க முடியாதவாறு திரையிட்டு மறைத்துள்ளனர். அங்கிருந்து மருத்துவர் சோனியின் வீடு வரை 20 அடி நீளம், 15 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டியுள்ளனர். இதன் வழியாக வந்து தான் பெட்டியில் இருந்த வெள்ளியை கொள்ளையடித்துள்ளனர். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளியின் மதிப்பு, எடை குறித்து மருத்துவர் தகவல் கூறவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக கூடுதல் காவல் ஆணையர் அஜய் லம்பா கூறுகையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளோம், அவர் ஒரு வர்த்தகர். அவரின் பிற 4 கூட்டாளிகளை தேடி வருகிறோம், விரைவில் பிடித்து விடுவோம் என தெரிவித்தார். மேலும் மருத்துவர் சோனியின் வீட்டில் 3 பெட்டிகள் இருந்துள்ளன. ஒரு பெட்டியில் வெள்ளி இருந்துள்ளதாக கூறுகிறார். மற்ற இரண்டு பெட்டிகளும் காலியாக உள்ளன. அவற்றில் ஏதும் இருந்ததா இல்லையா என்பதே தெரியவில்லை, அது குறித்தும் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Published by:Arun
First published: