ராமர் பெயரை வைத்து மோசமான அரசியல் செய்யும் பாஜக, தேர்தல் வெற்றிக்காக நாட்டில் மதக் கலவரத்தை தூண்டுகிறது என சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியாகியுள்ளது. இரு நாட்களுக்கு முன், டெல்லியில் உள்ள ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ராம நவமி தினத்திற்கு அசைவ உணவு உண்பது தொடர்பாக வலதுசாரி அமைப்பான AVBP-ஐ சேர்ந்த மாணவர்களுக்கும், இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பெரும் மோதல் வெடித்தது. இதில் பல்வேறு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், இந்த சம்பவத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் வருத்தமும் கண்டனமும் தெரிவித்துவருகின்றன. இந்த விவகாரத்தில் பாஜகவின் முன்னாள் கூட்டாளியான சிவசேனாவும் தனது சாம்னா இதழில் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. சம்னாவில் வெளியான கட்டுரையில்," பாஜகவின் புதிய இந்துத்துவவாதிகள், நாட்டை பிரிவினை காலத்தை நோக்கி இழுத்துச் செல்கின்றனர்.
மசூதிகளில் சென்று ஹனுமான் சாலிசா பாடி தேவையற்ற பதற்றத்தை உருவாக்குகின்றனர். மசூதிகளின் முன் ஹனுமன் சாலிசா பாடினால் சீன ராணுவத்தினர் பின்வாங்குவார்கள் என்றால் மகிழ்ச்சி தான். மேலும், ஜெஎன்யூ பல்கலைக்கழகத்தில் அசைவ உணவை காரணம் காட்டி தான் மோதல் வெடித்து. ஆனால், ராம நவமி கொண்டாட்டத்தால் மோதல் வெடித்ததாக பாஜக பொய் பரப்பிவருகிறது. ராமரை தேவையில்லாத சர்ச்சைக்கு இழுத்து பாஜகவினர் அவருக்கு அவமரியாதை செய்கின்றனர்.
Also read... சென்னை அயோத்ததியா மண்டபத்தை அறநிலையத்துறைக்கு கீழ் கொண்டு வரப்பட்ட உத்தரவுக்கு தடை இல்லை - உயர் நீதிமன்றம்
பாஜகவின் தற்போதைய இந்துத்துவ கொள்கை சுயநலம் சார்ந்தது. மக்களிடையே மத மோதலைத் தூண்டி கலவரத்தை உருவாக்கி, தேர்தலை வெல்வதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. மதம், அரசியல் விவகாரங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நுழையக்கூடாது. ஆனால், இந்த தவறை பாஜகவால் ஊக்குவிக்கப்படும் இந்துத்துவவாதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்லாமியர்கள் இந்து கோயில்களில் பொருள்களை விற்று வணிகம் செய்வதே நாட்டின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு ஆகும். இவ்வாறு தனது தலையங்க கட்டுரையில் சிவசேனா பாஜகவை கடுமையாக சாடியுள்ளது. பாஜகவின் நீண்ட கால கூட்டணி கட்சியாக சிவசேனா இருந்துவந்தது. மகாராஷ்டிராவில் இரு கட்சிகளும் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில், கடந்த தேர்தல் முடிவுக்குப்பின் இரு கட்சிகளுக்கும் முதலமைச்சர் பதவி தொடர்பாக மோதல் வெடித்து கூட்டணி உடைந்தது.
இதையடுத்து மாநிலத்தில் பரம விரோதிகளாக இருந்து வந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்து சிவசேனா தற்போது ஆட்சி நடத்திவருகிறது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முதலமைச்சராக உள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.