பிரதமர் மோடியின் பலம் பற்றி ராகுல் காந்தி புரிந்து கொள்ளாமல் இருப்பதாக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்படுகிறது.
தேர்தல் சாணக்கியர் என்ற புகழ் பெற்று விளங்குபவர் ஐ-பேக் எனும் நிறுவனத்தை நடத்தி வரும் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர். பாஜக, காங்கிரஸ் தொடங்கி தமிழகத்தில் திமுக, மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என வடக்கு முதல் தெற்கு வரை அரசியல் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பெருமைக்கு சொந்தக்காரர்.
தற்போது கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணிகளுக்காக பிரசாந்த் கிஷோர் கோவாவிற்கு வருகை தந்துள்ளார். அங்கு செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் பேசுகையில், “இந்திய அரசியலின் மையப் புள்ளியாக பாஜக விளங்கும். பாஜக வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி, அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த கட்சி இந்திய அரசியலின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது. சுதந்திரத்துக்கு பின்னர் தொடக்க காலங்களில் 40 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் மையப் புள்ளியாக இருந்தது போல பாஜக நிலைத்து நிற்கும். தேசிய அளவில் 30%க்கு கூடுதலான வாக்கு வங்கியை பெற்ற பின்னர் பாஜக அவ்வளவு சுலபமாக சுருங்கிவிடாது.
Also read:
மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும் பாஜகவை அசைக்க முடியாது – பிரசாந்த் கிஷோர் ஆருடம்
ராகுல் காந்தியின் பிரச்னை:
ராகுல் காந்தியின் பிரச்னையே அது தான். மக்கள் மோடியை அவ்வளவு சுலபமாக தூக்கி எறிந்து விடுவார்கள் என ராகுல் காந்தி கருதுகிறார். அப்படி நடக்கப்போவதில்லை.
பிரதமர் மோடியின் பலம் குறித்து ஆராய்ந்து, புரிந்து கொண்டு, அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களால் (ராகுல்) அவருக்கு (மோடி) போட்டியை கூட கொடுக்க முடியாது. நான் பார்த்த வரையில் பெரும்பாலனவர்களிடம் இருக்கும் ஒரு பிரச்னை, நரேந்திர மோடியின் பலம் என்ன, எதனால் அவர் இவ்வளவு பிரபலமாக திகழ்கிறார்? என்பதனை நேரம் செலவிட்டு ஆராய்ந்து தெரிந்து கொள்ளாமலே இருக்கிறார்கள். இதை தெரிந்து கொண்டால் மட்டுமே உங்களால் அவருக்கு போட்டியை ஏற்படுத்த முடியும்” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
Also read:
உலகப்புகழ்பெற்ற அமெரிக்க அருங்காட்சியத்தின் வாரிய உறுப்பினராக ஈஷா அம்பானி தேர்வு!
காங்கிரஸை வம்பிழுக்கும் பிரசாந்த் கிஷோர்:
மத்தியில் பாஜகவுக்கு மாற்றாக ஒரு அரசியல் சக்தியை உருவாக்கும் நோக்கில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பிரசாந்த் கிஷோர், மம்தா பானர்ஜியை இதற்காக பட்டை தீட்டி வருகிறார். அதே நேரத்தில் இவர் காங்கிரஸில் இணைவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் உட்கட்சி பூசல் சமயத்தில் , காங்கிரஸ் கட்சியிடம் அடிப்படை பலவீனத்தை சரி செய்யும் உடனடி திட்டம் எதுவும் கைவசம் இல்லை என ட்விட்டரில் பதிவிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.