இந்திய குடியரசுதின விழாவின் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார் இங்கிலாந்து பிரதமர்

போரிஸ் ஜான்சன்

 • Share this:
  ஜனவரி 26-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். இது இரு தரப்பு உறவில் புதிய சகாப்தம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

  ஜனவரி 26-ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இந்திய குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை அழைத்து தலைமை விருந்தினராக பங்கேற்க வைப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

  இந்நிலையில், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப், 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

  இது குறித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்தும், இரு தரப்பு உறவுகளை, உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்தும். 4 மணி நேரம் பேசினோம். சமீபத்திய ஆண்டுகளில், உலக அளவிலான அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இணைந்து செயல்படுவதன் மூலம், நமது நலன்கள் சிறப்பாக அமையும் என நம்புகிறோம் என்றார்.

  மேலும், வளைகுடா பகுதியின் முன்னேற்றங்கள், ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தோபசிபிக் பிராந்தியத்தின் வளர்ச்சி பற்றி விவாதித்ததாகக் கூறிய அமைச்சர் ஜெய்சங்கர், பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள சவால்களும் பற்றியும் ஆலோசித்ததாகத் தெரிவித்தார்.

  இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் கூறுகையில், இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் விடுத்துள்ள அழைப்பை, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: