இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
நோய் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,50,000 அதிகரித்துள்ளதாகவும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதம் 95.78 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் குணமடைவோர் எண்ணிக்கை அதிகம் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 13 நாட்களாக தினமும் நோய் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளதாகவும், ஜூன் 2ம் தேதிக்கு பிறகு, உயிரிழப்பு விகிதமும் கணிசமாக குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் தென்பட்டுள்ள புதியவகை வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார். புதியவகை கொரோனா வேகமாக பரவினாலும், அதன் அறிகுறிகளில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ், ஒரு மாதத்தில் இரண்டு முறை உருமாறக்கூடிய தன்மை கொண்டது எனவும் குலேரியா குறிப்பிட்டுள்ளார்.
சோதனை அடிப்படையில் தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள், புதியவகை கொரோனாவை எதிர்க்கும் வல்லமை கொண்டவை எனவும் குலேரியா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வரும் 28, 29ம் தேதிகளில் ஆந்திரா, அசாம், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில், கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இதற்காக அந்தந்த மாநிலங்களில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
Also read... 2020-ம் ஆண்டு முழுவதும் உலக நாடுகளை கட்டிப்போட்ட கொரோனா வைரஸ்: ஒரு பார்வை!
தடுப்பூசி கிடைத்தவுடன் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு செலுத்தப்படும் என்று, ஜம்மு-காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா சூழல் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவக்குழுவினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் திங்கள்கிழமை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு , ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.