இந்தியாவின் ’காஃபி கிங்’ வி.ஜி. சித்தார்த்தா வீழ்ந்தது எப்படி?

மாயமாகி உள்ள சித்தார்த்தா

மார்ச் 2019-ல் இந்தியாவின் 1,752 கஃபே-க்கள் மூலம் 1,814 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது ’கஃபே காஃபி டே’.

  • News18
  • Last Updated :
  • Share this:
கர்நாடகாவில் ஒரு சிறு காஃபித் தோட்ட முதலாளியின் மகனான வி.ஜி.சித்தார்த்தா இந்தியாவின் ‘காஃபி கிங்’ ஆக வளர்ந்து நின்றார்.

கர்நாடகாவின் சிக்மகளூருவில் பிறந்து மங்களூரு பல்கலைக்கழத்தில் தனது கல்விப் படிப்பை நிறைவு செய்தவர் சித்தார்த்தா. பங்குச்சந்தை தரகு நிறுவனம் ஒன்றில் ஒரு பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கினார். தொடர்ந்து பங்குச்சந்தை வர்த்தகத்தில் தேர்ந்த சித்தார்த்தா 1984-ம் ஆண்டு தனது திறமையால் சிவன் செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை முன்னணி பங்கு தரகு நிறுவனமாக உருவாக்கினார்.

2000-ம் ஆண்டு அந்த நிறுவனம் ‘வே2வெல்த்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1992-ம் ஆண்டு வாக்கில்தான் சித்தார்த்தா முதன்முதலாக காஃபி தொழிலில் கால் பதித்தார். 'பீன் கம்பெனி ட்ரேடிங்’ எனப் பெயரிடப்பட்டு தொடங்கிய நிறுவனம்தான் இன்றைய கஃபே காஃபி டே. காஃபி கொட்டைகளைப் பிரித்து எடுப்பதிலிருந்து தூளாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தொழில் வளர்ந்து 2018-ம் நிதியாணடில் 2,061 கோடி ரூபாய் தொழில் நிறுவனமாக கஃபே காபி டே மாறியது.

இந்தியாவின் முதல் காஃபி கஃபே மாடலைத் தொடங்கியவர் சித்தார்த்தா. 1996-ம் ஆண்டு பெங்களூருவில் முதல் கஃபே காஃபி டே தொடங்கப்பட்டது. இன்று இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் வியன்னா, செக் குடியரசு, மலேசியா, நேபாளம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலும் கஃபே காஃபி டே கிளைகள் திறக்கப்பட்டு வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகின்றன.

1999-ம் ஆண்டு முதன்முதலாக ‘மைண்ட் ட்ரீ’ என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் 10 பங்குதாரர்களுள் ஒருவராக இணைகிறார் சித்தார்த்தா. முதற்கட்டமாக அன்றைய காலகட்டத்திலேயே 340 கோடி ரூபாய் முதலீடு செய்கிறார். அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் எல்&டி நிறுவனத்துக்குத் தனது பங்குகளை விற்று 3ஆயிரம் கோடி ரூபாய் லாபம் எடுத்தார்.

காஃபி தொழில் மட்டுமல்லாது SICAL லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், டெக் பார்க் ஆன டாங்ளின் டெவலப்மெண்ட், காஃபி டே ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ் எனப் பல தொழில்களில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மார்ச் 2019-ல் இந்தியாவின் 1,752 கஃபே-க்கள் மூலம் 1,814 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர். மேலும், மார்ச் 2020-ன் குறிக்கோளாக 2,250 கோடி ரூபாய் வருவாய் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு சித்தார்த்தாவின் தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் நடைபெற்ற வருமான வரி சோதனையின் பின்னரே அவரது சோதனைக் காலம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. ஒரு மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி திடீரென மாயமாகிப் போயுள்ளார் சித்தார்த்தா. இவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிக்க தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், நண்பர்கள், குடும்பத்தார் எனப் பலரும் சித்தார்த்தாவின் மாமனாரும் முன்னாள் கர்நாடகா முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டில் கூடியுள்ளனர்.

சித்தார்த்தாவை தேடும் பணியில் கர்நாடகா போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பார்க்க: மாயமான ’கஃபே காஃபி டே’ நிறுவனர்... தொழில் தோல்வியால் தற்கொலையா?
Published by:Rahini M
First published: