முகப்பு /செய்தி /இந்தியா / அரசியல்வாதிகள் அள்ளி வழங்கும் இலவசத் திட்டங்கள்: மிக்ஸி கிரைண்டர்களில் தொடங்கி நிலாவுக்குப் பயணம் வரை..

அரசியல்வாதிகள் அள்ளி வழங்கும் இலவசத் திட்டங்கள்: மிக்ஸி கிரைண்டர்களில் தொடங்கி நிலாவுக்குப் பயணம் வரை..

இந்தியாவில் இலவசங்கள்.

இந்தியாவில் இலவசங்கள்.

பணத்திலிருந்து மதுபானம் வரை, வீட்டு உபயோகப் பொருட்கள், கல்வி உதவித்தொகை, மானியங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என இந்தியாவில் வழங்கும் வாக்களர்களுக்கான இலவசங்களின் இந்த பட்டியல் மிக நீளமானது.

  • 2-MIN READ
  • Last Updated :

இலவசங்கள் வழங்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. மேலும் இலவசங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் இரண்டும் வெவ்வேறு எனத் தெரிவித்து அரசின் பொருளாதாரத்தில் பணம் விரயமாகாமல் மக்கள் நலத்திட்டத்தைச் செயல்படுத்த ஒரு வழியைக் கண்டறியுமாறு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும் பழக்கத்தை எதிர்க்கும் வண்ணம், இலவசங்களை அறிவித்தால் அவற்றின் தேர்தல் சின்னத்தையும், அங்கீகாரத்தையும் தேர்தல் கமிஷன் ரத்து செய்யவேண்டும் என அஷ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் அந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்தைக் கேட்ட தலைமை நீதிபதி என் வி ரமணா மற்றும் நீதிபதி கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு, தேர்தலின்போது இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகளை அளிக்கும்

அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும் என்ற எண்ணம் ஜனநாயகத்திற்குப் புறம்பானது எனத் தெரிவித்தது.

“இலவசங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்கள் இரண்டும் வெவ்வேறானவை. அரசின் பொருளாதாரம் பணத்தை இழக்காமல் இருக்கவேண்டும்.

அதே நேரத்தில் மக்களுக்கான நலத்திட்டங்களும் சென்று சேரவேண்டும். இந்த இரண்டுக்கும் இடையேயான ஒரு சமநிலையை நாம் எட்டவேண்டும். அதனால்தான் இந்த விவாதமே எழுந்துள்ளது. இதில் தங்கள் சிந்தனையையும், எண்ணங்களையும் செலுத்த ஒருவர் கண்டிப்பாக இருக்கவேண்டும்.

என்னுடைய ஓய்வுக்கு முன்பாக எதையாவது கொண்டுவாருங்கள்.” எனத் தலைமை நீதிபதி தெரிவித்தார். அவர் ஆகஸ்ட் 26ம் தேதியோடு ஓய்வு பெறுகிறார்.

தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகள் இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் ஒரு தொன்று தொட்ட வழக்கமாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த வழக்கம் இந்தியாவில் இருக்கிறது.

பணத்திலிருந்து மதுபானம் வரை, வீட்டு உபயோகப் பொருட்கள், கல்வி உதவித்தொகை, மானியங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் என இந்த பட்டியல் மிக நீளமானது. நம் நினைவில் இருக்கும் சிலவற்றைப் பார்ப்போம்.

இலவசத் திட்டங்களின் ‘அம்மா’:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இந்திய அரசியலில் இலவசங்களின் முன்னோடி என்று சொன்னால் அது மிகையாகாது. இலவச மின்சாரம், இலசவ மொபைல் போன், இலவச வைஃபை, மானிய விலையில் ஸ்கூட்டர், வட்டியில்லாக் கடன், காற்றாடிகள், கிரைண்டர்கள், கல்வி உதவித்தொகை என பல இலவசங்களை அவர் அறிவித்தார். அவர் தொடங்கிய அம்மா கேண்டீன் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

தமிழகத்தின் டிவி நிமிடம்:

தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுகவிற்கு திமுகவும் இலவசங்கள் வழங்குவதில் சளைத்த கட்சியல்ல. 2006-ம் ஆண்டு மக்களுக்கு வண்ணத்தொலைக்காட்சி மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு இலவச கேஸ் இணைப்பை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபின் வண்ணத்தொலைக்காட்சி திட்டம் ரத்து செய்யப்பட்டது.

வாக்குக்கு பணமும் விக்கி லீக்ஸும்:

கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ஓட்டுக்குப் பணம் வழங்கும் சர்ச்சை விக்கிலீக்ஸ் மூலமாக வெடித்தது. 2009-ம் ஆண்டு திருமங்கலம் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை அரசியல் வாதிகளே ஒப்புக்கொண்ட விஷயம் விக்கிலீக்ஸ் மூலமாக வெளிவந்தது.

நடு இரவில் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்யும் வழமையான முறையைத் தவிர்த்து திருமங்கலத்தில் திமுக, வாக்காளர் பட்டியலில் உள்ள ஒவ்வொருவருக்கும் காலையில் நாளிதழ்களில் வைத்து பணம் விநியோகம் செய்தது தெரியவந்தது.

பணத்தோடு யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வாக்கு ரசீதும் அதற்குள் வைத்து கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் மூலம் தெரியவந்தது. மேலும் ஒவ்வொருவரும் அந்த ‘லஞ்சத்தை’ பெற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டதும் தெரியவந்தது.

சரியான பட்டனை அழுத்திய அகிலேஷ்:

கடந்த 2013-ம் ஆண்டு உத்தர்பிரதேசத்தில் இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் திட்டத்தை அகிலேஷ் யாதவ் அறிவித்தார். இது அவருக்கு அரசியில் ரீதியாக நிறைய பலன்களைப் பெற்றுத்தந்ததாகப் பலர் கருதினர். முக்கியமாக அவர் இளைஞர்களைக் கவர்ந்ததாகவும் கணிக்கப்பட்டது. 2012 முதல் 2015-ம் ஆண்டு இடையிலான காலகட்டத்தில் 15 லட்சம் லேப்டாப்கள் விநியோகிக்கப்பட்டன.

இலவச மின்சாரம் அறிவித்த பஞ்சாப்:

பஞ்சாபில் 1997-ம் ஆண்டு ஷிரிமோனி அகாலி தல் ஆட்சிக்கு வந்ததற்கு முக்கியக் காரணமாக இலவச மின்சாரம் என்ற வாக்குறுதியும் இருந்தது.

2002-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கேப்டன் அம்ரிந்தர் சிங்கின் அரசு, அந்த திட்டத்தை ரத்து செய்தாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகு அது மீண்டும் கொண்டுவரப்பட்டது.

முன்னணியில் உள்ள ஆம் ஆத்மி:

ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தான் தற்போது இலவசங்கள் வழங்கும் கட்சித்தலைவர்களில் முன்னணியில் உள்ளார். 2015-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் வாக்காளர்களின் 50% சதவீத மின்சாரக் கட்டணச் செலவு குறைக்கப்படும் எனவும், ஒரு நாளுக்கு ஒரு வீட்டிற்கு 700லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே டெல்லி மட்டுமல்லாமல் பஞ்சாபிலும் கால் பதித்துள்ள ஆம் ஆத்மி தன்னுடைய இலவசங்கள் பட்டியலில் இளைஞர்களுக்கான கல்வி உதவித்தொகை, வயதானவர்களுக்கான இலவச மதயாத்திரைத் திட்டங்கள், பெண்களுக்குப் பணம் என ஏராளமாக இணைத்து வருகிறது.

வாக்களித்தால் நிலவுக்குப் பயணம் செய்யலாம்:

கடந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு தேர்தலில் தெற்கு மதுரைத் தொகுதியில் போட்டியிட்ட துலாம் சரவணன் வாக்களர்களுக்கு நிலாவிற்கு 100 நாட்கள் பயணம், ஐபோன், குடும்பத்தலைவிகளுக்கு வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள், நீச்சல் குளத்தோடு கூடிய மூன்றடுக்கு வீடுகள், குட்டி ஹெலிகாப்டர்கள், பெண்களுக்குத் திருமணத்தின்போது 100 சவரன் தங்கம், ஒவ்வொரு குடும்பத்துக்கு ஒரு படகு மற்றும் இளைஞர்களுக்கு வியாபாரம் தொடங்க 50,000 அமெரிக்க டாலர்கள் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார்.

தன்னுடைய இந்த இலவச வாக்குறுதிகள் மாநிலத்தில் இருக்கும் இலவசங்கள் வழங்கும் கலாச்சாரத்தின் மீதான விமர்சனம் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை.

First published:

Tags: Election, Supreme court