மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்ற
பாஜக வலியுறுத்திவரும் சூழலில் பெட்ரோல் விலையை ஏற்றிய முட்டாள்தான் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. பெட்ரோல் ஒரு லிட்டர் 120ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டதால் வாகன ஓட்டிகள் வேதனை அடைந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தலா ரூ.5, ரூ.10ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது.
பாஜக ஆளும் மாநிலங்களில் வாட் வரி குறைக்கப்பட்டது. பிற மாநிலங்களில் இந்த வரி குறைக்கப்படாத நிலையில், வரியை குறைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் தெலங்கானா அரசு வாட் வரியை குறைக்க வேண்டும் என்று அந்த மாநில பாஜக வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், “ நாங்கள் வாட் வரியை உயர்த்தவில்லை. ஒரு பைசா கூட உயர்த்தவில்லை என்பதால் வரி குறைப்பு என்ற கேள்வி எழாது. டிஆர்எஸ் ஆட்சி அமைந்ததில் இருந்து வாட் வரி உயர்த்தப்படவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் (VAT) குறைக்கச் சொல்வான்? இதனை அதிகப்படுத்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும்” என்று கடுமையாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: சிஆர்பிஎஃப் வீரர் வெறிச்செயல்... துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் பலி!
தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்பட்டுள்ள மொத்த செஸ் வரியை (cess tax) நீக்க வேண்டும் என்று இந்திய அரசை நான் கோருகிறேன். இது சாத்தியமானது மட்டுமல்ல நாட்டின் நலனுக்கானதும்தான். ஏனெனில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராமல், பெட்ரோல், டீசல் மீதான செஸ் வரியை அரசு தேவையில்லாமல் விதித்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையை அதிகரித்தது. இப்போது, நாட்டின் ஏழை மக்கள் மீது அரசாங்கத்துக்கு கருணை இருந்தால், அது மொத்த செஸ் வரியை திரும்பப் பெற வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: பதவி பறிபோனால் போகட்டும்... மத்திய அரசை கடுமையாக எதிர்த்து பேசிய மேகாலயா ஆளுநர்..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.