ஹோம் /நியூஸ் /இந்தியா /

சபரிமலை மண்டல பூஜை.. 39 விநாடிகள் மட்டுமே மின் தடை.. கெத்துகாட்டிய கேரள மின்வாரியம்!

சபரிமலை மண்டல பூஜை.. 39 விநாடிகள் மட்டுமே மின் தடை.. கெத்துகாட்டிய கேரள மின்வாரியம்!

சபரிமலை

சபரிமலை

Sabarimala Ayyappan Temple : மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு இடையூறு இன்றி அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குவது சவாலானதாகவே இருந்தது. 3 ஆண்டுகளுக்கு முன்புவரை, பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு மின் கம்பம் அமைக்கப்பட்டு, மின் கம்பி வழியாக மின்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. இதனால், வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு வந்தன.

இதனைத் தொடர்ந்து, இன்சுலேட்டட் ஹை டென்ஷன் மற்றும் லோ டென்ஷன் பாதைகள் அமைக்கப்பட்டன. இதன்மூலம், மின்சாரம் தாக்கி வன விலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கப்படுகிறது. ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி, பழுதுகளை கேரள மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அவ்வப்போது சரிசெய்து வருகின்றனர். இதன்மூலம், மண்டல பூஜை காலமான 41 நாட்களில் 39 விநாடிகள் மட்டுமே மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியத்துக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வரும் 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற்று, 20-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதிக்கப்படும் நிலையில், இந்த காலகட்டத்திலும் தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், மின் வழித் தடங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

இதேபோல, பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்வதற்கு வசதியாக நீர்வள ஆணையம் சார்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சரம்குத்தியில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு தொட்டிகளும், ஜோதி நகரில் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு தொட்டியும் உள்ள நிலையில்,

இவற்றில் நீர் நிரப்பப்பட்டுள்ளது.சரல்மேடு, சபரி பீடம் உள்ளிட்ட இடங்களில் பம்ப் ஹவுஸ் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகள் சரிசெய்யப்பட்டன. நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள 12 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்தும் ஒரு மணிநேரத்துக்கு 35 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து விநியோகம் செய்யப்படுகிறது. மேலும்,

மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு இடையூறு இன்றி அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


First published:

Tags: Sabarimala, Sabarimala Ayyappan