• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது... துணைக்குழுவை கலைக்க தேவையில்லை - மத்திய நீர்வள ஆணையம் திட்டவட்டம்!

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது... துணைக்குழுவை கலைக்க தேவையில்லை - மத்திய நீர்வள ஆணையம் திட்டவட்டம்!

கோப்புப் படம்

கோப்புப் படம்

துணைக்குழுவைக் கலைக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீர்வள ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைத் தாங்கும் அளவிற்கு முல்லை பெரியாறு அணை பாதுக்காப்பாகவே உள்ளது என மத்திய நீர்வள ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

முல்லை பெரியாறு அணையின் பராமரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்க  நிபுணர்குழுவால் ஏற்படுத்தப்பட்ட அணை பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்கக்கோரி கேரளாவை சேர்ந்த கோத்தமங்கலத்தைச் சேர்ந்த டாக்டர் ஜோ ஜோசப், தொகுதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஷீலா கிருஷ்ணான்குட்டி, ஜெஸ்ஸிமோல் ஜோஸ் ஆகியோர் ரிட் மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை வழக்கு விசாரணையின் போது, " முல்லைபெரியாறு அணையை ஆய்வு செய்து அதன் பாதுகாப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட கண்காணிப்பு குழுவால் ஏற்படுத்தப்பட்ட  துணைக்குழுவை கலைக்க வேண்டும். மேற்பார்வை குழுவே முல்லைபெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும், குறிப்பாக பருவ மழை காலங்களில் தொடர் கண்காணிப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட வேண்டும்" என மனுதாரர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், கடந்த 2014 முதல் தற்போது வரை 13 முறை மேற்பார்வைக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டும் அணையின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படவில்லை என்றும், முல்லைபெரியாறு அணையில் இதுவரை  மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகளின் விவரங்கள், முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பராமரிப்பு பணிகள், பழுது நீக்கும் பணிகள் மத்திய நீர் ஆணையம் கடந்த 2018ல் வெளியிட்ட 'அணை பாதுகாப்பு, பராமரிப்பு  வழிகாட்டு நெறிமுறைகள்' அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறாதா என்பது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய நீர்வளத்துறை ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கூறினர்.

மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் இது தொடர்பாக விரிவான பதிலளிக்க மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி, மத்திய நீர்வள ஆணையத்தின் துணைத் தலைவர் நிதின் குமார் சார்பில் தாக்கல் செய்துள்ள பிராமண பாத்திரத்தில், "அணையின் பாதுகாப்பை அவ்வப்போது கண்காணிக்கவும், குறிப்பாக பருவ மழைக்கு முன்னரும், பருவ மழையின்போது அணையின் பாதுகாப்பை கண்காணித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கவே துணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களைத் தாங்கும் அளவிற்கு முல்லை பெரியாறு அணை பாதுக்காப்பாகவே உள்ளது" என நீர்வள ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Also read... பூமியில் வேகமாக குறைந்து வரும் ஆக்ஸிஜன் - உயிர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு!

மேலும், "உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் வழிகாட்டுதல் அடிப்படையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதால் இதில் தன்னிச்சையான முடிவுகளோ அல்லது விதிமுறை மீறல்களோ எதுவும் இல்லை. அணைப் பாதுகாப்புக்குழு தனது அதிகாரத்தை துணைக்குழுவுக்கு வழங்கியுள்ளது என மதுதாரர்கள் கூறுவதன் ஏற்றுக் கொள்ள முடியாது" எனவும்  பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே துணைக்குழுவைக் கலைக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீர்வள ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 130 அடியாகக் குறைக்கக் கூறி கேரளாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: