அமேசான் உள்ளிட்ட வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக ஒன்று திரளும் இந்திய வர்த்தகர்கள் - ஒரு மாத கால போராட்டம் அறிவிப்பு

அமேசான்

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகர்களுக்கு எதிராக ஒரு மாத கால போராட்டத்தை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

 • Share this:
  டெல்லியில் நடைபெற்ற வர்த்தகர்கள் மாநாட்டில், ‘வெளிநாட்டு நிதியில் செயல்படும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தக விதிகளை வெளிப்படையாக மீறுவதன் மூலம் இந்தியாவின் சிறு தொழில் செய்பவர்களைக் கடுமையாக பாதிக்கின்றனர். சட்டங்களை திரிப்பதன் மூலம் இந்திய ஆன்லைன் வர்த்தகத்தில் தனி நிறுவனமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

  நுகர்வோர் சட்டத்தின் படி போடப்பட்ட விதிகளை மத்திய அரசு உடனடியாக தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக குரல் உயர்த்துங்கள் என்ற இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 27 மாநிலங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

  இதுகுறித்து தெரிவித்த அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தேசியத் தலைவர் பி.சி.பார்டியா மற்றும் பொதுச் செயலாளர் பிரவீன் காண்டெல்வால், ‘ஆன்லைன் வர்த்தகம் தொடர்பான தங்களது நிலைப்பாடு குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளின் பதில்களுக்காக இந்த நாட்டின் வர்த்தகர்கள் காத்திருப்போம். வருகிற சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலின்போது வர்த்தகர்கள் நாங்கள் எங்களது பங்கைக் காட்டுவோம்.

  தற்போது எல்லாமே வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் நடைபெறுகிறது. அதனால், வர்த்தகர்கள் நாங்களும் வாக்கு வங்கியாக மாறுவதற்கு தயங்க மாட்டோம். வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால் சிறுதொழில் முனைவோர்கள் அழித்தொழிக்கப்படுவது குறித்து அரசியல் கட்சிகள் கவலை கொள்கின்றனரா? என்பதை அவர்கள் மூலம் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம். இந்த வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் புதிய வடிவில் கிழக்கிந்திய கம்பெனியாக உருவாக விரும்புகின்றனர்.

  அது இந்தியாவின் பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கிறது. வர்த்தகர்கள் மூலம் தங்களது வியாபாரங்களை மேற்கொள்ளும் இந்திய பெருநிறுவனங்களான டாடா, கோத்ரேஜ், ரிலையன்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், பதஞ்சலி, கிஷோர் பிரியானி குழுமம், ஆதித்யா பிர்லா குழுமம், ஆம்வே, ஸ்ரீராம் குழுமம், பிர்மால் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களை நாடுவதற்கு அகில இந்திய வர்த்தகர்கள் மாநாடு முடிவு செய்துள்ளது.

  இந்தியாவின் தொழில் இந்தியர்களிடம் இருக்க வேண்டும். இந்தியர்களின் கைகளில் இருக்கவேண்டும். அந்த பலன்கள் இந்த நாட்டின் நுகர்வோர்கள், வர்த்தகர்கள், தொழிற்நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் வர்த்தகத்தின் மீது படையெடுக்க தீவிரமாக காத்திருக்கும் சர்வதேச ராட்சசர்களுக்கு எதிரான சண்டை என்பதுதான் இந்த மாநாட்டின் கருத்து.

  இந்த நாட்டின் அனைத்து தரப்பையும் ஒரே தளத்தில் கொண்டுவர வேண்டும் என்பது இப்போது அவசியமான ஒன்று. அப்போதுதான் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் சில்லறை வர்த்தகத்தை இந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து காக்க முடியும். ஆன்லைன் வர்த்தகத்துக்கென மத்திய அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் அனைத்து ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கும் சமமாக இருக்கவேண்டும்.

  அது வெளிநாட்டு நிறுவனமாக இருந்தாலும், உள்நாட்டு நிறுவனமாக இருந்தாலும் சரி. அப்போதுதான் ஆன்லைன் வர்த்தகத்தை எந்த ஒரு நிறுவனமும் தனிப்பட்ட கையகப்படுத்த முடியாது என்று அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆன்லைன் வர்த்தக விதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தக மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு வலியுறுத்தியுள்ளது. அரசு எந்த அழுத்தத்தின் கீழும் வரக் கூடாது.

  இந்த நாட்டின் எட்டு கோடி வர்த்தகர்களும் அரசுடன் இணைந்து நிற்கிறோம். செப்டம்பர் 15-ம் தேதி நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் வர்த்தகர்கள் இணைந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதேபோல, செப்டம்பர் 23-ம் தேதி நாடு முழுவதுமுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலுமுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பிரதமர் பெயரில் நினைவுக்குறிப்பு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 30-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மாநில முதல்வர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுக்கு நினைவுக் குறிப்புகள் வழங்கப்படும். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ராவணனின் வடிவில் வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் உருவப் பொம்மைகள் அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை எரிக்கப்படும். இந்த ஒரு மாத கால போராட்டத்தின்போது மார்கெட் பகுதிகளில் வர்த்தகர்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு பேரணியை முன்னெடுத்து எதிர்ப்பு பதிவு செய்வார்கள்’ என்று தெரிவித்தனர்.
  Published by:Karthick S
  First published: