ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்ணையாறு நதிநீர் விவகாரம்: மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கத் தவறியதாக குற்றச்சாட்டு.. நியூஸ் 18 தமிழ்நாடு பெற்ற விவரங்கள் என்ன?

பெண்ணையாறு நதிநீர் விவகாரம்: மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கத் தவறியதாக குற்றச்சாட்டு.. நியூஸ் 18 தமிழ்நாடு பெற்ற விவரங்கள் என்ன?

பெண்ணையார் நதிநீர்

பெண்ணையார் நதிநீர்

பெண்ணையார் நதிநீர் விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு மத்திய நீர்வளத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில பிரத்யேக தகவல்களை பெற்றுள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

பெண்ணையாறு நதிநீர் விவகாரம் தொடர்பாக ஓராண்டு கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது வரை மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்ணையார் விவகாரத்தில் தமிழ்நாடு  கர்நாடகா இடையில் நிலவும் சிக்கலுக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட குழுவின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசிற்கு பரிந்துரைத்தது பேச்சுவார்த்தைக் குழு.

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ம் கீழ் தீர்ப்பாயம் அமைக்க விண்ணப்பம் பெறப்பட்ட ஓராண்டில் தீர்ப்பாயம்  அமைத்திருக்க வேண்டும். ஓராண்டு கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது வரை மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நியூஸ் 18 தமிழ்நாடுக்கு மத்திய அரசிடமிருந்து பெற்ற பிரத்யேக தகவலில், கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து ஓசூர் வழியாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டம் வழியாக 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இங்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையை ஒட்டி கர்நாடக அரசு புதிய அணை கட்ட திட்டமிட்டு, அதற்கான ஆய்வு பணிகளை 10ஆண்டுகளுக்கு முன்பாகவே தொடங்கியது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ளது குறித்து அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினார். மேலும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. தென்பெண்ணை ஆற்றில் தங்களின் ஒப்புதல் இல்லாமல் கட்டுமானப் பணிகள், ஆய்வுகள் உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. தமிழகத்திலும் தென்பெண்ணையாறு ஓடுவதால் கர்நாடக அரசு முழு உரிமை கோர முடியாது என்றும் இந்த விவகாரத்தில் தீர்வுகாண நடுவர் மன்றம் அமைக்‍க வேண்டும் என்றும்  தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது

இந்த மனு மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விஷயத்தில் இந்த  நதிநீர் சிக்கலை தீர்க்கக்கோரி தமிழக அரசு இதனால் வரையில்  தீர்ப்பாயம் அமைக்கக்கோரி மத்திய அரசிடம் வலியுறுத்தவே இல்லை என்பதால் தமிழக அரசின் மனுவை ஏற்க முடியாது.ஒன்றிற்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒரு நதியை பகிர்ந்து கொள்கையில் சிக்கல் ஏற்பட்டால் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956ந் கீழ் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்க்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கக்கோரி மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோர முடியும்.

ஆனால் , இந்த தென்பெண்ணையாறு விவகாரத்தில் சிக்கலை தீர்க்க ஒரு தீர்ப்பாயம் அமைப்பதை தெரிந்தே அரசு தவிர்த்து வந்துள்ளதால் மத்திய அரசு இந்த பிரச்னையில் தலையிடவில்லை என்று கூறுவது தவறு எனவும் அடுத்த நான்கு வாரங்களுக்குள் தமிழக அரசு மத்திய அரசிடம் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956ந் கீழ் இந்த சிக்கலை தீர்க்க தீர்ப்பாயம் அமைக்கக் கோரலாம் எனவும் உத்தரவிட்டு தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

2007-ஆம் ஆண்டிலே இந்த அணை கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் கர்நாடக அரசு பெற்று ஏறத்தாழ 70% சதவிகித பணிகளை  முடித்துவிட்டது. ஆனால், இத்தனை ஆண்டு காலத்தில்  ஒருமுறை கூட மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் சிக்கலை தீர்ப்பதற்கான தீர்ப்பாயம் கோரி முறையான கோரிக்கை வைக்கவில்லை என்பது விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு பெண்ணையார் நடுவர் மன்றம் அமைக்கக்கோரி  நவம்பர் 11ஆம் தேதி கடிதம் அனுப்பியது. தமிழக அரசின் கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களிடம் கருத்து பெறுவதற்காக, சுமூகமாக சிக்கலை தீர்க்கவும் இந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பேச்சுவார்த்தைக் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அக்குழுவில் மத்திய நீர்வளத் துறையின் தலைவர் தமிழ்நாடு கர்நாடகா ஆந்திரா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நீர்வளத் துறையின் தலைமைப் பொறியாளர், மத்திய வேளாண்மைத் துறையின் இணை செயலாளர், மத்திய சுற்றுச்சூழல் துறையின் இணை செயலாளர், நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹைட்ராலஜியின் இயக்குனர், மத்திய நீர்ப்பாசன மேலாண்மை அமைப்பின் தலைமை பொறியாளர் ஆகிய ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர்.

இது தொடர்பாக நியூஸ் 18 தமிழ்நாடு மத்திய நீர்வளத்துறையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில பிரத்யேக தகவல்களை பெற்றுள்ளது. அதில் "பேச்சுவார்த்தைக்  குழுவானது பிப்ரவரி 24 மற்றும் ஜூலை 7ஆம் தேதி ஆகிய இரண்டு தினங்களில் இந்த நதிநீர் விவகாரம் தொடர்பாக விவாதித்து.

இறுதி அறிக்கையை ஜூலை 31 ஆம் தேதி மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது.

Also read... பட்டியல், பழங்குடி இன மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்துவதா? மத்திய, மாநில அரசுகளுக்கு வைகோ கண்டனம்..

இந்த சிக்கலை தீர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளபப்ட்டதாகவும் ஆனால்ன்முடிவு எட்டபடவில்லை என்பதால் ஒரு தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கலாம்" என்று தெரிவித்துள்ளது. மேலும் தற்போது வரை தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு நியூஸ்18 தமிழ்நாடுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் தாவா சட்டம் 1956-ம் பிரிவில் 3-ன்  கீழ் மாநில அரசிடமிருந்து நதிநீர் சிக்கலை தீர்க்க ஒரு தீர்ப்பாயம் அமைக்க கோரி விண்ணப்பிக்க பட்டால் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஓராண்டிற்குள் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமக்கு கிடைத்த தகவலின்படி தற்போதுவரை தீர்ப்பாயம் அமைக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Central government