2023ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்துடன் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவுபெற்றது.
இந்நிலையில், இன்று தொடங்கும் 2வது அமர்வு, ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மாநிலங்களவையில் 26 மசோதாக்கள், மக்களவையில் 9 மசோதாக்கள் என 35 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லாலு பிரசாத், மணிஷ் சிசோடியா உள்ளிட்டோரிடம் சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அதானி குழும விவகாரம், ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டு, எல்ஐசி பங்குகள் சரிவு, மோடி குறித்த பிபிசி ஆவண பட சர்ச்சை போன்றவை குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் என கூறப்படுகிறது.
மேலும், வரி கட்டுப்பாடு, வருமான வரி குறைப்பு, சாமானியர்களுக்கு சாதகமாக பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என குற்றஞ்சாட்டியுள்ள எதிர்க்கட்சிகள், அது குறித்தும் முழக்கமிட வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதால், பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இந்த கூட்டத்தொடரில் இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க; ”இப்போலாம் எம்.பிக்களுக்கு மரியாதையே இல்லை”... திருமாவளவன் கலகல பேச்சு..!
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது குறித்து மக்களவையில் திங்கட்கிழமை விவாதிக்கக் கோரி மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர் பாலு கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாகவும், உயிரிழப்புகளை தடுக்க ஆன்லைன் சூதாட்டத்தை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என்றும் டி.ஆர் பாலு கேட்டுக் கொண்டுள்ளார். இதேபோல், நீட் நுழைவுத்தேர்வு ரத்து குறித்தும் தமிழ்நாடு எம்.பி.க்கள் கோரிக்கை வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.