ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள கான்ஜில்லூர் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை மேற்கொண்டர். அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையின் போது, முகமது லோன் என்ற பயங்கரவாதி மற்றொரு பயங்கரவாதியுடன் பதுங்கி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் இரு பயங்கரவாதிகளுக்கும் இடையே வெடித்த மோதலில் பயங்கரவாதிகள் இருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். பயங்கரவாதி முகமது லோன் கடந்த ஜூன் 2ஆம் தேதி குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற வங்கி மேலாளர் கொலை வழக்கின் குற்றவாளி ஆவார்.
குல்காம் மாவட்டத்தில் உள்ள எலகாஹி தேஹாதி வங்கி கிளையில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் பணியில் இருந்த வங்கியின் மேலாளர் விஜய் குமார் மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். பயங்கரவாதி மேலாளரை சுட்டு வீழ்த்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்த விஜய் குமார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவராவார்.
இதையும் படிங்க:
104 மணிநேரப் போராட்டம்.. ஆழ்துளை கிணற்றில் இருந்து உயிருடன் மீண்ட சிறுவன்
ஜம்மு காஷ்மீரில் 4,000க்கும் மேற்பட்ட காஷ்மீரி பண்டிட்டுகள் பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அங்கு காஷ்மீரிகள் அல்லோதோருக்கு பாதுகாப்பு அற்ற நிலை அண்மை காலமாக நீடித்து வருகிறது. குறிப்பாக, பண்டிட்டுகள் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தோர் குறி வைத்து கொல்லப்பட்டு வருகின்றனர்.
இதை தடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக ராணுவத்தினரும் அதிரடி என்கவுண்டர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறனர். 2022ஆம் ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.