தெலங்கானா சபாநாயகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களுக்கும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலங்கானா மாநில சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ ரெட்டியின் பேத்திக்கு கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சி முடிந்த ஐந்து நாட்களாகும் நிலையில் சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ ரெட்டி நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.
கடந்த வாரம் நடைபெற்ற போச்சாராம் ஸ்ரீநிவாஸ ரெட்டியின் பேத்தி திருமண விழாவில் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவருமான கே.சி.சந்திரசேகர் ராவ், ஆந்திரப் பிரதேச முதல்வரும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த திருமணத்தில் பல்வேறு விவிஐபிக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அவருடன் நெருக்கமாக இருந்த ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில முதல்வர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
ஆந்திரா, தெலங்கானா என இரு மாநில முதல்வர்களுக்குள்ளும் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்னை ஏற்பட்ட பின்னர் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் தான் அவர்கள் ஒன்றாக சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. மேலும் நிகழ்ச்சியின் போது கொரோனாவால் தற்போது பாதிக்கப்பட்டிருக்கும் சபாநாயகர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ ரெட்டிக்கு அருகே ஒரே சோபாவில் ஜெகன்மோகன் ரெட்டியும், சந்திரசேகர் ராவும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். இருவருமே மாஸ்க் அணிந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also read: பெங்களூரை மீண்டும் அலற வைத்த பயங்கர சத்தம் - மக்கள் பீதி
தெலங்கானாவில் சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகனின் சகோதரி அரசியல் கட்சியை தொடங்கியுள்ள போதிலும் கூட அந்தக் கட்சியில் இருந்து தன்னை விலக்கியே வைத்திருக்கிறார் ஜெகன் மோகன் ரெட்டி.
கொரோனா பரவல் காரணமாக முன்னதாக திருமணங்களில் அதிகம் பேர் கலந்து கொள்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அவை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இரு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் கூட முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா பரவாமல் காக்கும் என அரசுகள் கூறிவருகிற போதிலும் இரு மாநில முதல்வர்களே அந்த விதியை காற்றில் பறக்கவிட்டு தற்போது கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில் இருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.