தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான கிளப்பில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள செகந்திராபாத்தில் கடந்த 1879 ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட ராணுவ அதிகாரிகளுக்கான கிளப் ஏற்படுத்தப்பட்டது. அந்த கிளப் 2017ஆம் ஆண்டு நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. நேற்று இரவு வழக்கம் போல் அங்கு ராணுவ அதிகாரிகள் வந்து சென்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென்று அந்த கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டு சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் கிளப் முழுவதுமாக எரிந்து சாம்பலாகியது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 10 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் வகையில் அங்கு உள்ள வீடுகள் மீதும் தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது. தீ விபத்து காரணமாக 20 கோடி ரூபாய் மதிப்புள்ள மேஜை, நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்கள் ஆகியவை முழுவதுமாக எரிந்து சாம்பலாகி விட்டன.
இதையும் படிங்க: புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை நிறுத்தம்
நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான ராணுவ அதிகாரிகள் கிளப் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.