ஹோம் /நியூஸ் /இந்தியா /

800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தெலுங்கானா எம்பி!

800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பாதுகாக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தெலுங்கானா எம்பி!

ஆலமரம்

ஆலமரம்

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலமரமானது, ஆசியாவிலேயே மிக பெரிய மரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Telangana, India

  தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் மாவட்டத்தில் பில்லாலமாரி என்று அழைக்கப்படும் 800 ஆண்டுகள் பழமையான ஆலமரம் இருக்கிறது. இதனை பாதுகாப்பதற்காக, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ் குமார், உள்ளூர் வளர்ச்சித் திட்ட நிதியின் கீழ் ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.

  முன்னதாக, பழமை வாய்ந்த இந்த மரத்தை கடந்த திங்கள்கிழமை (செப்.12) அவர் நேரில் சென்று பார்வையிட்டார். மரத்தை பாதுகாக்க மாநில சுற்றுலா துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுடு, மாவட்ட ஆட்சியர் மற்றும் சுற்றுலாத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

  ஆலமரத்தின் புகைப்படங்களை டிவிட்டரில் சந்தோஷ் குமார் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில், “அமைச்சர் ஸ்ரீநிவாஸ் கவுடாவுடன் இணைந்து, மஹபூப்நகர் மாவட்டத்தில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தை பார்வையிட்டேன்.

  இது மிக அற்புதமான நாளாக அமைந்தது. மாவட்ட ஆட்சியர், சுற்றுலாத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இதனை பராமரித்து வருகின்றனர். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

  Read More: பள்ளி வேனில் மாணவி உறங்குவதை கவனிக்காமல் கதவை மூடிய டிரைவர்... மூச்சு திணறி சிறுமி உயரிழந்த சோகம்

  ஆலமரத்தை பாதுகாக்கும் வகையில் எம்பி நிதியில் இருந்து பணம் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சந்தோஷ் குமார், இன்னும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் மேம்பாட்டுப் பணிகளை செய்ய இது உதவிகரமாக இருக்கும் என்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆலமரமானது, ஆசியாவிலேயே மிக பெரிய மரங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை என்று சந்தோஷ் குமார் தெரிவித்தார்.

  ஆலமரத்தை தனது சொந்தக் குழந்தையைப் போல, சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீநிவாஸ் பாதுகாத்து வருகிறார் என்று சந்தோஷ் குமார் பாராட்டினார். இருவரும் இணைந்து ஆலமரத்தடியில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.

  பல தலைமுறைகளாக தழைத்து நிற்கும் இந்த ஆலமரத்தை பாதுகாப்பதற்காக சொட்டுநீர் பாசன முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மரத்தை சுற்றியிலும் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆலமரத்தில் இருந்து விழுதுகளாக பரவியுள்ள ஒவ்வொரு வேரையும் பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மஹபூப்நகர் மாவட்டத்திற்கு வருகை தந்து இந்த ஆலமரத்தை பார்வையிடுகின்றனர். குறிப்பாக இயற்கை ஆர்வலர்களின் மனம் கவர்ந்த இடமாக இந்த ஆலமரம் இருக்கிறது. ஒரு சோலைவனம் போல பறந்து, விரிந்து காணப்படும் இந்த ஆலமரத்தில் எண்ணற்ற பறவைகளும் வாழ்ந்து வருகின்றன. கோடை காலத்தில் குளுமையான இடத்தை தேடும் உள்ளூர் மக்களுக்கு ஒரு குடை போல அடைக்கலம் கொடுத்து வருகிறது இந்த ஆலமரம் .

  Published by:Srilekha A
  First published:

  Tags: MP