கிணற்றில் 9 பேரின் சடலம் - விஷம் கொடுத்து கொலையா? போலீசார் எழுப்பும் கேள்விகள்

”பாழடைந்த கிணற்றில் 9 பேர் விழுந்து பலியாவது நடைமுறையில் சாத்தியமில்லை என்கிறது காவல்துறை”

கிணற்றில் 9 பேரின் சடலம் - விஷம் கொடுத்து கொலையா? போலீசார் எழுப்பும் கேள்விகள்
News 18
  • Share this:
வடமாநில தொழிலாளர்கள் உட்பட 9 பேர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கருதப்பட்ட நிலையில், கொலை என்கிறார்கள் அம்மாநில போலீசார்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தின் கோர்ரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

அவர்களில் ஒருவர்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத். இவர் தனது குடும்பத்தினர் 5 பேருடன் கரிமாபாத்தில் வாடகை வீட்டில் வசித்துள்ளார். ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டதால், வாடகை கொடுக்க வழியின்றி அதன் உரிமையாளருக்கு சொந்தமான குடோனில் குடியேறியுள்ளார்.


இந்த நிலையில், குடோனில் வசித்து வந்த மசூத், குடும்பத்துடன் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் சந்தோஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் தேடியுள்ளனர்.

ஐஸ் பேக்டரி அருகில் உள்ள பாழடைந்த கிணற்றில், சடலங்கள் மிதப்பதாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலையடுத்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் அங்கு முகாமிட்டனர்.

தண்ணீரில் மிதந்த 4 சடலங்களை கைப்பற்றினர்.  தொழிற்சாலையில் பணியாற்றிய மசூத், அவரது மனைவி நிஷா, மகள் புஸ்ரா, அவரது மூன்று வயது மகன் என்பது தெரியவந்தது.ஊரடங்கு காரணமாக, நெருக்கடியை தாங்க முடியாமல், குடும்பத்துடன் மசூத் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று தொடக்கத்தில் போலீசார் கருதினர். ஆனால், மேலும் 5 பேரது சடலங்கள் அதே கிணற்றிலிருந்து மீட்புக்குழுவினர் மீட்டெடுத்ததால் பரபரப்பு கூடியது.

அவை, மசூத்தின் மகன்கள் சோகில், சபாத் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஷக்கில் அகமது, பீகாரைச் சேர்ந்த ஸ்ரீராம், சியாம் ஆகியோரது உடல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை என்பது தவறான கோணம் என்று போலீசார் விசாரணையின் போக்கை மாற்றினர்.

போலீசார் அழைத்துவந்த மோப்ப நாய், இறந்தவர்கள் வாழ்ந்த குடியிருப்பு அருகில் சென்று நின்றது. விசாரணையில், 2 நாட்கள் முன்பு வாரங்கல் நகரத்திற்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை பெருமளவு வாங்கிவந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடியதில், இவர்களுள் மோதல் ஏற்பட்டதாக வேலைபார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, இவர்களுடன் பணியாற்றி வந்த இரண்டு இளைஞர்களை காணவில்லை என்கிறது காவல்துறை.

தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும் என்கிறது போலீஸ். உயிரிழந்தவர்களின் மரணத்திற்கு விஷம் கலந்த உணவை உண்டது காரணமாக இருக்கலாம் என்று போலீசார் நம்புகிறார்கள்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த சண்டையால், குழு மோதல் காரணமாக யாராவது உணவில் விஷம் கலந்துள்ளனரா எனவும் விசாரணை நடந்துவருகிறது.

பாழடைந்த கிணற்றில் 9 பேர் விழுந்து பலியாவது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, இவர்களை கொலை செய்து யாரோ கிணற்றில் வீசியிருக்கலாம் என்கிறது காவல்துறை.

அதேபோல், ஒருவர் இதை செய்திருக்க வாய்ப்பில்லை, குறைந்தபட்சம் இருவர் இந்த காரியத்தை செய்திருக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading