பீகாரில் தேர்தல் ஆணையம் ஆதரவுடன் பின்கதவு வழியாக பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது - தேஜஸ்வி யாதவ்

தேஜஷ்வி யாதவ்

பீகார் தேர்தலில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

 • Last Updated :
 • Share this:
  பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-வுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

  243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதி ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும், லாலு பிரசாதின் மகனான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்த மெகா கூட்டணியும் போட்டியிட்டன.

  ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையான நிலையில், வாக்கு எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தொடக்கத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றதை தொடர்ந்து, 10 மணிக்குப் பின்னர், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகரித்தது.

  அதன்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 133-ல் பாஜக கூட்டணி முன்னிலை பெற்றது. அதேவேளையில், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் இருந்தது. பின்னர் நிலைமை மாறி, இரு அணிகளிடையே கடும் இழுபறி நீடித்தது.

  இறுதியாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துள்ளது. இதில் பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, இந்துஸ்தானி அவாம் மோர்சா மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி தலா நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

  காங்கிரசின் மகாகத்பந்தன் கூட்டணியில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி, 75 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் 19, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 12, மார்க்சிஸ்ட் 2 மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இரண்டு என அக்கூட்டணி மொத்தம் 110 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஒரு தொகுதியும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஒரு தொகுதியும் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் வெற்றி பெற்றுள்ளார்.

  தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியின் இல்லத்தில் ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், தங்களது கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். 2015-ம் ஆண்டிலும், தங்களுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்த நிலையில், அதிகாரத்தைப் பெறுவதற்காக பின்கதவு வழியாக பாஜக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
  Published by:Vijay R
  First published: