அடுத்தாண்டு அறிமுகமாகும் தேஜாஸ் மார்க் 2 போர்விமானம் - ஹெச்.ஏ.எல் அறிவிப்பு!

அடுத்தாண்டு அறிமுகமாகும் தேஜாஸ் மார்க் 2 போர்விமானம் - ஹெச்.ஏ.எல் அறிவிப்பு!

தேஜாஸ் மார்க் 2

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் விதமாக தேஜாஸ் மார்க் 2 போர் விமானங்கள் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்படும் என இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். மாதவன் தெரிவித்துள்ளார்.

எல்லைப் பகுதியில் சீனாவுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காஷ்மீர் முதல் அருணாச்சலப்பிரதேசம் வரையில் உள்ள எல்லைப் பகுதிகளில் சீனா தொடர்ந்து அத்துமீறலை அரங்கேற்றி வருகிறது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண மத்திய அரசு முயற்சி எடுத்தாலும், அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் சீனா அத்துமீறி வருகிறது. இதனால் எல்லைப் பகுதியில் போருக்கான அறிகுறிகள் தொடர்ந்துகொண்டே இருப்பதால், ராணுவத்தின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நிலையில் இந்தியா உள்ளது. 

சீனாவைப் பொறுத்தவரை உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தை வைத்திருப்பதால், அந்த நாட்டின் எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிடமும் பிரச்சனை செய்து வருகிறது. இதனால், இந்திய ராணுவத்தின் விமானப் படையை பலப்படுத்தும் நோக்கில் புதிய போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.தேஜாஸ் மார்க் 1 ஏ (Tejas Mark-IA) போர் விமானங்களை உருவாக்குவதற்கு, மத்திய பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் (HAL) நிறுவனத்துடன், 48,000 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய அரசு ஒப்பந்தமிட்டுள்ளது. 

தேஜாஸ் மார்க் 1-ஐ விட மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போர் விமானங்கள் உருவாக்கப்பட உள்ளன. இந்நிலையில், அடுத்த தலைமுறை போர் விமானமான தேஜாஸ் மார்க் 2 விமானம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இயக்குநருமான ஆர்.மாதவன் கூறியுள்ளார். பன்முனைத் தாக்குதல்களை தொடுக்கும் வகையிலும், அதிக பவர் எஞ்சின், அதிக சுமை தாங்கும் திறன் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த போர் விமானம் வடிவமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். 

அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் தேஜாஸ் மார்க் 2 போர் விமானம் 2023 ஆம் ஆண்டில் தனது முதல் அதிவேக பயிற்சி ஓட்டத்தை தொடங்கும் எனவும், 2025 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் முழுமையாக இணைக்கப்படும் எனவும் ஆர்.மாதவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தேஜாஸ் மார்க் 2 போர் விமானத்தில் இடம்பெறும் ஆயுதங்கள் தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத அவர், சூழலையும், தேவைகளையும் பொறுத்து அதற்கேற்ப வடிவமைப்பில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என கூறினார். இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தேஜஸ் மார்க் 1 போர் விமானம், விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் போதுமான அம்சங்கள் இடம்பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. 

Also read... சசிகலா சிறையில் இருந்து வெளி வந்திருப்பது சிலருக்கு தடுமாற்றம் ஏற்பட்டிருக்கலாம் - டி.ராஜேந்தர்!

அவற்றின் மேம்பட்ட அம்சங்களை உருவாக்க மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதையடுத்து,  அதனடிப்படையில் தேஜாஸ் மார்க் 1 ஏ போர் விமானங்கள் உருவாக்கப்படுகின்றன. தொலை தூரத்தில் உள்ள இலக்குகளை அடைவது, ஆகாயத்திலேயே எரிபொருள் நிரப்பிக் கொள்வது, எதிரிகளின் ரேடாரை முடக்குவது மாதிரியான வசதிகள் இதில் இடம்பெற உள்ளன. தொடர்ந்து பேசிய மாதவன், AMCA திட்டத்தின் கீழ் போர் விமானங்களின் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் துறை பங்களிப்பையும் இணைத்துக்கொள்வது குறித்து யோசித்து வருவதாகவும் கூறினார். 

5வது தலைமுறை ஊருடுவல் போர்விமானங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். புரொட்டோ டைப் போர் விமானங்களை தயாரிப்பது குறித்து 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவு செய்யப்பட்டு, அதன் உற்பத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் முடிவு செய்யப்படும் என இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் இயக்குநர் மாதவன் கூறினார். மேலும், சீனாவின் JF-17 போர் விமானத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானம் மேம்பட்ட எஞ்சினையும், ரேடார் மற்றும் எலக்ட்ரானிக் வசதிகளையும் பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: