சியாச்சின் பனிமலையில் 15,632 அடி உயரம் ஏறி உலக சாதனை படைத்த துணிச்சல் மிக்க மாற்றுத்திறனாளிகள் குழு!

சியாச்சின் பனிப்பாறையில் 15,632 அடி உயரத்தில் குமார் போஸ்ட்டை 8 மாற்று திறனாளிகள் அடைந்ததன் மூலம் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர்.

  • Share this:
சாதனை படைக்க உடல் ஊனம் எல்லாம் ஒரு தடையே இல்லை என்பது பலமுறை பலரால் நிருபிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல்வேறு உடல் குறைபாடுகளை கொண்ட 8 இந்தியர்கள் அடங்கிய குழு ஒன்று, உலகின் மிக உயரமான பனிப்பாறை என குறிப்பிடப்படும் சியாச்சின் மலையின் மீதேறி மாபெரும் வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மிக உயரமான சியாச்சின் பனிமலையில் 15,632 அடி உயரத்தில் அமைந்திருக்கும் குமார் போஸ்ட்டை அடைந்ததன் மூலம், 8 மாற்று திறனாளிகள் அடங்கிய குழு இந்த சிறப்பு சாதனையை படைத்து அனைவரையும் திகைக்க செய்து இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் அடங்கிய இவ்வளவு பெரிய குழு உலகின் மிக உயர்ந்த போர்க்களத்தில் ஏறி சாதனை படைத்துள்ளது இதுவே முதல் முறை. "ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம்" (Operation Blue Freedom) என்று இந்த சாதனை பயணத்திற்கு பெயரிடப்பட்டு இருந்தது. சியாச்சின் base camp -ல் இருந்து ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணம் துவங்கியது. ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் பயணத்தை மாற்று திறனாளிகள் அடங்கிய குழுவினர் கடந்த மாதம் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று துவக்கி, கடந்த ஞாயிறு செப்டம்பர் 12-ம் தேதி மலையுச்சியை (15,632 அடி) அடைந்ததன் மூலம் வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்காக பணியாற்றும் ஆயுதப்படை வீரர்களின் குழுவான 'டீம் கிளாவ்' (Team CLAW) இந்த சாதனை பயணத்திட்டத்தை செயல்படுத்தி, 8 பெற அடங்கிய சாதனை குழுவிற்கு உதவியது.

வருடம் முழுவதும் பனிகட்டிகளால் நிறைந்து காணப்படும் இமயமலையின் மீதுள்ள சியாச்சின் பனிமலைக்கு சாகச பயணம் செல்ல விரும்பும் குழுவினர், அரசு மற்றும் ராணுவத்தின் அனுமதி பெற்று செல்வது வழக்கம். இந்த சாகச பயணத்தின் போது பல்வேறு அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். திடீர் பள்ளங்கள், பனிப்பொழிவு, பனிச்சரிவு, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல இடர்பாடுகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியமாக இருப்பவர்கள் மற்றும் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

இதனிடையே சாதிக்கும் வேட்கையில் இருந்த கண் மற்றும் கை குறைபாடுகள் காணப்பட்ட 20 பேர் கொண்ட மாற்றுத்திறனாளிகள் குழு சியாச்சின் பனிமலையில் ஏற அனுமதி கேட்டது. 6 மாதங்கள் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்ட பிறகு 20 பேர் குழுவில், உலகின் சவாலான நிலப்பரப்புகளில் ஒன்றான சியாச்சின் பனிப்பாறையில் மாற்றுத்திறனாளிகள் ஏறி சாதனை படைக்கும் "Land world record" முயற்சிக்காக இறுதியாக 8 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்தே ராணுவ வீரர்கள் உதவியுடன் சிறப்பு பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள் குழுவினர் சியாச்சின் பனிமலை உச்சியின் மீதேறி சாதனை படைத்து உள்ளனர்.சியாச்சின் பனிப்பாறையில் 15,632 அடி உயரத்தில் குமார் போஸ்ட்டை 8 மாற்று திறனாளிகள் அடைந்ததன் மூலம் மாபெரும் உலக சாதனை படைக்கப்பட்டதாக இந்திய ராணுவத்தின் Northern Command, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறி இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: