அசாம் மாநிலத்தில் டீ விற்கும் இளைஞர் ஒருவர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.
அசாம் மாநிலம், பஜாலி மாவட்டம், பட்டசர்குர்சி சவுக் பகுதியில் வசிப்பவர் ராகுல்தாஸ் (24). இவரது தந்தை 11 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்தை விட்டு சென்று விட்டார். 2 பிள்ளைகளுடன் வறுமையில் சிக்கி திணறிய ராகுலின் தாய், டீ கடை நடத்தி குடும்பத்தை காப்பாற்றி வந்தார். வறுமை காரணமாக ராகுல் 12ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.
டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் வேலையை ராஜினாமா செய்து விட்டு நீட் தேர்வுக்கு தயார் படுத்திக்கொண்டார். தேர்வில் 12,068வது ரேங்க்கில் தேர்ச்சி பெற்றார். இவர் பட்டியலின வகுப்பில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. ராகுலின் மருத்துவ படிப்பு செலவு முழுவதையும் அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க: எந்தெந்த உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தலாம்- பட்டியலை வெளியிட்ட போக்குவரத்துத்துறை
இதுதொடர்பாக ராகுல்தாஸ் கூறும்போது, அசாமின் பட்டசர்குச்சி பகுதியில் உள்ள தனது அம்மாவின் கடையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கு இடையில் கிடைக்கும் நேரத்தில் படித்தேன். அம்மா எங்களுக்காக கஷ்டப்படுவதை பார்த்திருக்கிறேன். கடையில் ஒரு உதவியாளரை எங்களால் பணியமர்த்த முடியவில்லை. பள்ளி செல்லும் காலத்திலிருந்தே அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நினைத்தேன். நானும் டீ தயாரித்து விற்று வந்தேன். இதற்கு இடையே கிடைக்கும் நேரத்தில் படித்தேன்.
தொடர்ந்து, 2015ல் மேல்நிலைப் படிப்பை முடித்ததும், பணத்தேவை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டார். எனினும், ராகுல் உயர்கல்வி மீது கொண்டிருந்த ஆர்வம் காரணமாக அவர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் டிப்ளமோ படிப்பில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு பின்னர் 85 சதவீத மணிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற ராகுல், குவஹாத்தியில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக பணியைத் தொடர்ந்ததாக கூறுகிறார்.
நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு திமுக அரசின் மெத்தனப்போக்கே காரணம் - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
எனினும், அந்த வேலையில் திருப்தி இல்லாமல் இருந்துள்ளார். தான் எப்போதுமே மருத்துவர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன் என்கிறார் ராகுல். அவரின் உறவினர்களில் ஒருவர் பல் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கிறார். அவரே ராகுலுக்கு உத்வேகமாக இருந்ததாக கூறுகிறார்.
இதையடுத்து, தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, நீட் தேர்வுக்காக தயாராக தொடங்கியுள்ளார். தன்னிடம் புத்தகம் வாங்க பணம் இல்லாததால், ஆன்லைனில் என்னென்ன கிடைக்கிறதோ அதை மட்டும் படித்து நீட் தேர்ச்சி பெற்றுள்ளதாக ராகுல்தாஸ் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.