ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

ஆந்திராவில் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சுட்டுக்கொலை: மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்

சர்வேஸ்வர ராவ், சிவேரி சோமா

சர்வேஸ்வர ராவ், சிவேரி சோமா

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

  ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு தொகுதி எம்எல்ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ். சர்வேஸ்வர ராவ் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சிவேரி சோமா ஆகியோர் அரக்கு தொகுதிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான தூட்டங்கியில் நடைபெற்ற கிராம தர்ஷினி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று காலை அங்கு சென்றனர்.

  இந்நிகழ்ச்சியின்போது, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் அவர்களது குறைகளை விரைவில் தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

  பின்னர் சர்வேஸ்வர ராவும், சிவேரி சோமாவும் அங்கிருந்து காரில் புறப்பட்டனர். தூட்டங்கியை அடுத்த அடர்ந்த காட்டுப் பகுதியில் சென்றபோது, 50-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் குறுக்கே பாய்ந்து காரை வழிமறித்தனர்.

  பின்னர் அவர்கள் சர்வேஸ்வர ராவை பலவந்தமாக காரில் இருந்து கீழே இறக்கினர். தொடர்ந்து, அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில்,  சர்வேஸ்வர ராவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், அம்மாவோயிஸ்டுகள் சிவேரி சோமாவை சுமார் 50 அடி தூரம் தரதரவென்று இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றனர்.

  இந்தச் சம்பவத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் ஆந்திரா-ஒடிசா எல்லைப்பகுதி செயலாளர் ராமகிருஷ்ணா முன்னின்று ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

  2014-ம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் அரக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சர்வேஸ்வர ராவ், 2016 ஏப்ரல் 28-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:DS Gopinath
  First published:

  Tags: Andhra Pradesh, Maoist, MLA murder, Murder