வீட்டில் இருந்து வேலை செய்பவரா? உங்களுக்கு பட்ஜெட் தாக்கலில் காத்திருக்கும் ஜாக்பாட்!  

வீட்டில் இருந்து வேலை செய்பவரா? உங்களுக்கு பட்ஜெட் தாக்கலில் காத்திருக்கும்  ஜாக்பாட்!  

காட்சிப் படம்

பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளும் PWC நிறுவனம் பட்ஜெட்டில் ,வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு சில சலுகைகள் இருக்கும் என கணித்துள்ளது.

  • Share this:
2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1 -ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் , அதன் மீதான எதிர்பார்ப்புகளும், யூகங்களும் முன்னெப்போதும் இல்லாத வகையில் எகிறியிருக்கின்றன. முதன்முறையாக, காகிதம் இல்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் ஒவ்வொரு துறையும் குறிப்பிடதகுந்த சேதங்களையும், மிகப்பெரும் பொருளாதார இழப்புகளையும்  சந்தித்துள்ளது. 

இதனால், பொருளாதாரத்தை மீள்கட்டமைப்பு செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது. அனைத்து துறைகளிலும் சரிசமமான முக்கியத்துவத்தைக் கொடுத்து புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நெருக்கடியும் இருக்கிறது. இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என பல்வேறு நிதி நிறுவனங்களும், நிபுணர்களும் முன்கூட்டியே கணித்து யூகங்களாக வெளியிட்டு வருகின்றனர்.

 

சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பு : 

அந்தவகையில் பொருளாதார ஆய்வுகளையும், நிதி ஆலோசனைகளையும் மேற்கொள்ளும் PWC நிறுவனம் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அதில், பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து விளக்கியுள்ளது. குறிப்பாக, வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு குறிப்பிடத்தகுந்த சலுகைகள் இருக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது. இது தொடர்பாக பேசிய PWC இந்தியா நிறுவனத்தின் மூத்த வரி பங்குதாரர் ராகுல்கார்க், தனிநபருக்கு கொடுக்கப்படும் பணம் அல்லது செலவழிக்கும் பணத்தின் மதிப்பைக் கொண்டு டிமான்ட்- ஐ கணக்கிட வேண்டும் என்றார். 

கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால் சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி செலுத்துவதில் இருந்து கூடுதல் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார். குறிப்பாக, சம்பளதாரர்களுக்கு கூடுதல் சலுகைகள் தேவைப்படுவதாகவும் ராகுல் கார்க் கூறியுள்ளார். வீட்டில் இருந்து வேலை செய்வதை நிறுவனங்கள் ஊக்குவிப்பதால், மின்சார கட்டணம், வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நிறுவனங்களுக்கு இயல்பாகவே கிடைத்து வருவதாக கூறியுள்ள அவர், அவை ஊழியர்களுக்கு செலவாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார். நெட்வொர்க் கட்டணம், மின்சாரம், ஏசி உள்ளிட்ட செலவுகள் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு அதிகரித்திருப்பதாகவும், சில நிறுவனங்கள் சலுகைகள் அளித்தாலும், பெரும்பாலான நிறுவனங்களை அளிப்பது இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். 

வரிச்சலுகை அளித்தால், வீட்டில் இருந்து வேலை செய்பவர்களின் கைகளில் கூடுதல் பணம் செல்லும் எனக் கூறியுள்ள கார்க், அதன்மூலம் நுகர்வுதிறன் அதிகரித்து பொருளாதாரத்திலும் குறிப்பிடத் தகுந்த உயர்வை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு வரிச்சலுகை அதிகளவு இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

எந்தெந்த துறைகளுக்கு வரிச்சலுகை?

PWC நிறுவனத்தில் மறைமுக வரி பிரிவில் பணியாற்றும் பிரதீக் ஜெயின் பேசும்போது,  மத்திய பட்ஜெட்டில் கலால் வரி உயர்வதற்கான வாய்ப்பு இல்லை எனக் கூறியுள்ளார். அதேவேளையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான சுங்கவரியை குறைப்பதற்கான வாய்ப்பும் மிக குறைவு எனத் தெரிவித்துள்ளார். செல்போன், பர்னிச்சர் பொருட்கள் மீதான வரி உயர்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் பிரதீக் ஜெயின் கூறியுள்ளார். 

கடந்த 2 ஆண்டுகளாக சுங்கம் மற்றும் கலால் சேவைகளில் நேரடி வரிவிதிப்பில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க பொதுமன்னிப்பு திட்டம், விவாட் டி விஸ்வாஸ் திட்டம் ஆகியவற்றை மத்திய அரசு கொண்டுவந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கியிருப்பவர்கள் மத்திய அரசின் இந்த திட்டங்களை பயன்படுத்தி சிக்கல்களை தீர்ப்பதற்கு இது சரியான தருணம் என  பிரதீக் ஜெயின் வழிகாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற பிரச்சனைகளில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை தள்ளுபடி செய்தால் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: