கரையைக் கடந்த டவ்தே புயலின் கண்பகுதி - குஜராத், மகாராஷ்டிராவில் கடும் சேதம்

டவ் தே புயல் பாதிப்பு

குஜராத் மாநிலத்தின் சவுராஷ்டிராவில், டவ்தே புயல் கண் பகுதி வலுவிழந்து கரையை கடந்தது. அப்போது மணிக்கு 165 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் கட்டங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.

  • Share this:
    தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ‘டவ் தே’ அதிதீவிரபுயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தநிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்- மாகுவா இடையே புயல் கரையை நெருங்கியது. அப்போது இடைவிடாத மழையும் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவு 11: 30 மணியளவில், சவுராஷ்டிரா பகுதி அருகே அதிதீவிரம் கொண்ட புயல் தீவிர புயலாக வலுவிழந்து. புயலின் கண் பகுதி கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியது. இதில், வீடுகள் உட்பட பல்வேறு கட்டங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. அத்துடன், மின் கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    புயல் சேதங்களை சமாளிப்பதற்காக முதலமைச்சர் விஜய் ரூபானி தலைமையில் நள்ளிரவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அத்துடன், பாதிப்பு பகுதிகளில் மீட்டு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    டவ் தே புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் சோம்நாத் மாவட்டம் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்துக்கும் இடையிலான சாலை முடங்கியது. சாலை முழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்ததால் அதனை அகற்றும் பணிகளில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு இடங்களிலும் மின்கம்பங்களும் சாய்ந்துள்ளன.

    புயலால் மகாராஷ்டிர மாநிலம் ராய்கட், மும்பை மாவட்டங்களில் மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. மும்பையில் கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதுடன், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக பந்த்ரா - வொர்லி கடற்கரையோர சாலை மூடப்பட்டது. இதேபோன்று புறநகர் ரயில் பாதையில் தண்ணீர் சூழ்ந்ததால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மோனோ ரயில் சேவையும் முடங்கியது. தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. மாநிலத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு 9 பேர் காயமடைந்துள்ளனர்.

    கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு மாவட்டங்களில் 73 கிராமங்கள், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பால் நான்கு பேர் உயிரிழந்தனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: