முகப்பு /செய்தி /இந்தியா / புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பீகார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க தமிழக காவல்துறை நடவடிக்கை

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து வதந்தி: பீகார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க தமிழக காவல்துறை நடவடிக்கை

காட்சிப் படம்

காட்சிப் படம்

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: பாஜக பீகார் ட்விட்டர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக, ட்விட்டரில் தவறான தகவலைப் பரப்பி வரும் பீகார் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தின் மீது 2 பிரிவுகளின் கீழ் தமிழ்நாடு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அந்த பக்கத்தை நிரந்தரமாக முடக்கவும் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

வடமாநில தொழிலாளர்கள் தொடர்ச்சியாக தமிழகத்தில் தாக்கப்படுவதாக சில தினங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இந்த வதந்தியால் பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாகவும் இங்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகி வருவதாகவும் தொடர்ச்சியான பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டன.

வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சில தேசிய ஊடகங்களும் தவறாக செய்திகளை பரப்பின. மேலும், பீகார் மாநில பா.ஜ.கவின் அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டது.

இது தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், மேலும் பரவிய செய்தி வதந்தி எனவும் வதந்தி பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக வதந்தி பரப்பப்படும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் ஒரு வழக்கு பதிவும், திருப்பூரில் இரண்டு வழக்கு பதிவும் செய்யப்பட்டது. மேலும்,  வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் தொடர்புடைய நபர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றது.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது எனவும் இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், திமுக ஆரம்பித்த இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய இந்த வெறுப்புப் பிரச்சாரம், தற்போது, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம் என அவர் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

திமுக எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள் என வட மாநில இளைஞர்கள் குறித்து வெறுபுணர்வை ஊட்டி வருவதாகவும் அதன் காரணமாகத்தான் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் பிரிவு, கிரைம் பிரிவு காவல்துறையினர் அண்ணாமலை மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி, மதம் இனம் மொழி தொடர்பாக கலகம் செய்ய விரோத உணர்ச்சிகளை தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் பீகார் பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர்  பக்கத்துக்கு எதிராக சென்னை மத்திய குற்றபிரிவு சைபர் கிரைம் போலீசார் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி, மதம் இனம் மொழி தொடர்பாக கலகம் செய்ய உணர்ச்சிகளை தூண்டி விடுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், பா.ஜ.க பீகார் ட்விட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடமும் முறையிட்டுள்ளனர்.

இதுகுறித்து, ‘சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து வதந்திகளை பதிவிட்டு வரும் பக்கங்களை நீக்க ட்விட்டர் நிறுவனத்திற்கும், பீகாரிலிருந்து பதியப்பட்டு வரும் வதந்திகளை கண்காணித்து நீக்கம் செய்ய பீகார் மாநில காவல் அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published: