நீர் பங்கீடு குறித்து தமிழகம், கேரள முதலமைச்சர்கள் இன்று சந்திப்பு.... 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிகழ்வு

கடந்த 2004-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர்கள் ஜெயலலிதாவும், உம்மன் சாண்டியும் சென்னையில் சந்தித்துப் பேசியபோது தீர்வு எட்டப்படவில்லை

நீர் பங்கீடு குறித்து தமிழகம், கேரள முதலமைச்சர்கள் இன்று சந்திப்பு.... 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் நிகழ்வு
தமிழகம், கேரள முதலமைச்சர்கள் சந்திப்பு
  • News18
  • Last Updated: September 25, 2019, 7:48 AM IST
  • Share this:
இரு மாநிலங்களுக்கிடையிலான நீர் பங்கீடு தொடர்பாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மற்றும் கேரள முதலமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் இன்று சந்தித்துப் பேசவுள்ளனர்.

தமிழகம் மற்றும் கேரளாவுக்கிடையே நதிநீர்ப் பங்கீடு தொடர்பாக நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் திருவனந்தபுரத்தில் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளனர்.

இரு மாநில முதல்வர்களுக்கிடையே நீர் பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக 15 ஆண்டுக்குப் பிறகு இந்த சந்திப்பு நிகழ்கிறது. கடந்த 2004-ம் ஆண்டில், அப்போதைய முதல்வர்கள் ஜெயலலிதாவும், உம்மன் சாண்டியும் சென்னையில் சந்தித்துப் பேசியபோது தீர்வு எட்டப்படவில்லை. அதன்பிறகு அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்தன.


2017-ல் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் சந்தித்தபோது நீர்ப் பங்கீடு பற்றி அதிகாரப்பூர்வமாக விவாதிக்கப்படவில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, மதுரை உள்ளிட்ட 5 தென் மாவட்டங்களின் பாசனத்துக்கு உதவும் வகையில் முல்லைப் பெரியாறு அணையின் நீரை தேக்கும் அளவை அதிகரிப்பது முக்கிய கோரிக்கையாக இருக்கும். அணையை பலப்படுத்திவிட்டு 152 அடி வரை நீரை தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் 136 அடிக்கு மேல் உயர்த்த கேரளா அனுமதிப்பதில்லை.

இதேபோல் வைகை அணைக்கு நீர்வரத்தை அதிகரிக்கும் வகையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டப் பகுதியில் இரு புதிய அணைகளை கட்ட அனுமதி கோருவது தமிழகத்தின் மற்றோர் முக்கிய கோரிக்கையாக இருக்கும். பரம்பிக்குளம் - ஆழியார் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆனைமலையார் ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நீரை திருப்பும் ஒப்பந்தம் தொடர்பாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார். அதே நேரத்தில் தமிழக பகுதியில் உள்ள ஆழியாறு அணையில் இருந்து உரிய நீரை தமிழகம் ஒதுக்குவதில்லை என கேரளா குற்றம்சாட்டி வருகிறது.மேலும் நீலகிரியில் உற்பத்தியாகி கேரளா வழியாக பாயும் பாண்டியார் - புன்னம்புழா ஆறுகளில் அணை கட்டும் திட்டம் மற்றும் பம்பை - அச்சன் கோவில் ஆறுகள் இணைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.

முதல்வருடன் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.

Also watch

First published: September 25, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading