Tamil News Live : வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம்

Today News Tamil - Live Updates: கொரோனா அப்டேட் , தமிழ்நாடு , புதுச்சேரி கள செய்திகள், மாவட்ட நிகழ்வுகள், உலக செய்திகள், தேசிய அரசியல், உள்ளிட்ட அனைத்தையும் உடனுக்குடன் அறியலாம்.

 • News18 Tamil
 • | July 13, 2021, 13:21 IST
  facebookTwitterLinkedin
  LAST UPDATED A YEAR AGO

  AUTO-REFRESH

  HIGHLIGHTS

  18:2 (IST)

  இன்றைய நேரலை செய்திகள் இத்துடன் நிறைவு பெறுகின்றது. மீண்டும் நாளை காலை நேரலை தொடரும். செய்திகளை உள்ளது உள்ளபடி தெரிந்து கொள்ள எப்போதும் இணைந்திருங்கள் நியூஸ்18நேரலையில் நன்றி.

  17:59 (IST)

  ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி 30 லட்சத்தை சுருட்டியதோடு, பணத்தை திருப்பி கேட்டவரை கூலிப்படையை ஏவி கடத்த முயன்றவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்

  திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் லியோ தாமஸ் பீட்டர். இவரிடம் ரயில்வேயில் வேலை தாங்கித் தருவதாக 30 லட்சம் ரூபாயை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பவர் வாங்கியுள்ளார். அதன்பிறகு வேலை வாங்கித் தராமலும், பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் போக்கு காட்டி வந்திருக்கிறார். இதனிடையே திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்து பணத்தை திருப்பி வாங்கி கொள்ளுமாறு ஸ்ரீநாத் தெரிவிக்கவே, அங்கு சென்ற லியோ தாமசை கூலிப்படையை ஏவி துப்பாக்கி முனையில் காரில் கடத்த முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி ஸ்ரீநாத் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

  17:59 (IST)

  முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்தோடு இருப்பில் உள்ள நோட்டு புத்தகங்களை விநியோகம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நான்கு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது.

  17:58 (IST)

  சென்னை திருவொற்றியூரில் மாநகராட்சி பூங்காவை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. 

  சென்னையில் மாநராட்சிக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே மாநகராட்சி பூங்காவை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தனியார் மருத்துவமனையின் கீழ் தளம் மற்றும் முதல் தளத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

  17:57 (IST)

  கோவையில் கேரள இளைஞர்களை கடத்தி, மூன்றரை லட்ச ரூபாயை பறித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர். 

  கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுஜித், வேன் வாங்குவதற்காக கோவையை சேர்ந்த சாஜினை அணுகியுள்ளார். இந்நிலையில் கோவை வந்த சுஜித் மற்றும் அவரது நண்பர் சுனிலை அழைத்து சென்ற 3 பேர் கொண்ட கும்பல், இருவரையும் தாக்கி பணத்தை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சாஜின் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  17:57 (IST)

  திருநெல்வேலியில் அரசின் ஆட்டுச் சந்தை மூடப்பட்டுள்ளதால், சாலைகளில் சந்தை அமைத்து ஆடு விற்பனை நடைபெற்றது.

  திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமைகளில் ஆட்டுச்சந்தை செயல்படுவது வழக்கம், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அரசின் ஆட்டுச் சந்தைகள் செயல்படுவதில்லை. வரும் 21-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சாலைகளில் சந்தை அமைக்கப்பட்டு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. குறைந்தபட்சம் 13 ஆயிரம் முதல் அதிகபட்சம் 18 ஆயிரம் வரை ஒரு ஆட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் குவிந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. குறுகலான இடத்தில் சந்தை நடந்ததால் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க முடியவில்லை என்றும், அரசு ஆட்டுச் சந்தையை திறந்தால் இந்த பிரச்னை இருக்காது எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

  17:50 (IST)

  "ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக தர வேண்டும்"பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

  தமிழகத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகளை சிறப்பு ஒதுக்கீடாக அளித்திடக் கோரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாததால், அதிகரித்து வரும் தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வது கடினமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தடுப்பூசி ஒதுக்கீட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யவும், மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்திற்கு சரியான தடுப்பூசிகளை ஒதுக்கவும் கோரிக்கை வைத்துள்ளார். 

  17:48 (IST)

  இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறுகிறது கர்நாடகா

  கர்நாடகாவில் இரவு நேர ஊரடங்கை திரும்ப பெறவும், பார்கள், கேளிக்கை விடுதிகளை மீண்டும் திறக்கவும் அம்மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 31 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 5 விழுக்காட்டிற்கும் கீழ் பதிவாகி வருகிறது. எனவே அதிகப்படியான தளர்வுகளை அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி தற்போது வரை அமலில் இருக்கும் இரவு நேர ஊரடங்கு திரும்ப பெறப்பட உள்ளது. இரவு நேர கேளிக்கை விடுதிகள், பார்கள் செயல்பட கர்நாடக அரசு அனுமதி வழங்க உள்ளது. பெங்களூருவில் நோய் தொற்று ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதால் அங்கு தியேட்டர்கள் திறக்கப்படவும் வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

  17:47 (IST)

  சச்சின், தோனி வரிசையில் இணையும் சவுரவ் கங்குலி

  சச்சின், தோனி வரிசையில் அடுத்ததாக சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் திரைப்படமாக உள்ளது. 200 முதல் 250 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கங்குலியின் இளமைப் பருவம், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனது, லார்ட்ஸ் மைதான காட்சிகள் மற்றும் தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளது என அவரது வாழ்வின் முக்கிய தருணங்கள் அனைத்தும் இடம்பெறும் வகையில் இந்தப் படம் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  17:45 (IST)

  தலைவாசல் காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் விலை சரிவு

  சேலம் தலைவாசல் காய்கறி சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல் , சிறுவாச்சூர், ஊனத்தூர், கச்சிராபாளையம், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் சின்ன வெங்காயம் வரத்து அதிரித்துள்ளது. இதனால் கடந்த வாரங்களில் கிலோ 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம் பாதியாக குறைந்து 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.