ஹோம் /நியூஸ் /இந்தியா /

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : தமிழக, கேரள முதலமைச்சர்கள் நேரில் ஆலோசிக்க திட்டம்

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் : தமிழக, கேரள முதலமைச்சர்கள் நேரில் ஆலோசிக்க திட்டம்

கேரளா - தமிழக முதலமைச்சர்கள்

கேரளா - தமிழக முதலமைச்சர்கள்

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு பற்றியும் இரு மாநில முதலமைச்சர்களும் பேசவுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் வரும் டிசம்பர் மாதம் நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின்போது, முல்லைப் பெரியாறு அணை குறித்தும், பிற முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பருவ மழை பெய்யும் போதெல்லாம் கேரளாவின் பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கி வருவதோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக மற்றும் கேரள உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் கேரளாவில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின், "கேரள முதல்வர் பினராயி விஜயனும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் வரும் டிசம்பர் மாதம் நேரில் சந்தித்துப் பேச உள்ளனர். அப்படி நேரில் சந்திக்கும் போது முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக பினராயி விஜயன் வலியுறுத்துவார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது குறித்தும், அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் எடுத்துச் செல்லவும், அதிக தண்ணீரை வெளியேற்றுவதாக இருந்தால் 24 மணி நேரத்திற்கு முன் தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்திருந்தார்.

முல்லை பெரியாறு அணை புவியியல் ரீதியாக கேரளாவில் அமைந்திருந்தாலும், தமிழகத்தால் பராமரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இந்த அணையில் இருந்து வரும் தண்ணீர் தமிழகத்தின் பல பகுதி விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருந்து வருகிறது. சில நாட்களாகவே, முல்லைப் பெரியாறு அணையை அகற்றிவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள், பிருத்விராஜ், உன்னிமுகுந்தன் உட்பட பலர் வாதிட்டு வந்த நிலையில், தமிழ்நாடு தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

Must Read : சசிகலா விவகாரத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே முரண்பாடு ஏன்? - செல்லூர் ராஜூ விளக்கம்

அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாகவும், அணையின் பாதுகாப்பு பற்றியும், அணையை நம்பி உள்ள 10 லட்சத்திற்கும் மேலான விவசாய மக்களின் வாழ்வாதாரம் பற்றியும் கேரள முதலமைச்சரிடம் வலியுறுத்துவார் என்றும், இந்த நிலையில் கேரள, தமிழக முதல்வர்கள் இடையே நடைபெறவுள்ள சந்திப்பில் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: MK Stalin, Mullai Periyar Dam, Pinarayi vijayan