ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமாகாது.! ஆனால் இது கட்டாயம்.. மக்களவையில் அறிவித்த நிதின் கட்கரி
ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது குற்றமாகாது.! ஆனால் இது கட்டாயம்.. மக்களவையில் அறிவித்த நிதின் கட்கரி
நிதின் கட்கரி
Cell phone driving : டிரைவிங்கின் போது போனில் பேசுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் சில விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசும் போது கூறினார்.
இந்தியாவில் வாகன போக்குவரத்து என்பது நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்திற்கு ஏற்ப சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் உயருகிறது. எனினும் மாநில அரசுகள் மற்றும் போக்குவரத்துக்கு காவல்துறை ஏற்படுத்தி வரும் தொடர்ச்சியான விழிப்புணர்வு காரணமாக பல மக்கள் முன்பை விட இப்போது சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். கவன குறைவாக வாகனங்களை இயக்குவதன் காரணமாக விபத்துகள் நேரிடுவது அதிகரித்து வரும் நிலையில், டிரைவிங்கின் போது ஏற்படும் கவன சிதறலுக்கு முக்கிய காரணமாக இருந்து வரும் பழக்கம் வாகனத்தை இயக்கியபடியே மொபைலில் பேசுவது.
சில நேரங்களில் தவிர்க்க முடியாத அழைப்புகள் மொபைலில் வரும் நேரத்தில் ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தை ஓரங்கட்டிவிட்டு பேசும் பழக்கம் கொண்ட டிரைவர்கள் இருக்கும் அதே நேரத்தில், ஓட்டி கொண்டிருக்கும் வாகனத்தின் வேகத்தை குறைக்காமலேயே மொபைலை காதில் வைத்து பேசி கொண்டே ஒரு கையால் டிரைவ் செய்வது உள்ளிட்ட செயலை செய்யும் மக்களால் பல விபத்துகள் நிகழ்கின்றன.
எனவே வாகனம் ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்துவது அல்லது பேசுவது சட்டவிரோதமாக கருதப்பட்டு இந்த தவறை செய்வோரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வாகனம் ஓட்டும் போது மொபைலில் பேசுவது விரைவில் சட்டபூர்வமானது தான் என்று அறிவிக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி இருக்கிறார்.
எனினும் டிரைவிங்கின் போது போனில் பேசுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டாலும் சில விதிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் பேசும் போது கூறினார். மக்களவையில் இதுகுறித்து பேசி இருக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மொபைலை ஹேண்ட்ஸ்-ஃப்ரீ டிவைஸுடன் (hands-free device) கனெக்ட் செய்திருந்தால் மட்டுமே டிரைவிங்கின் போது வாகனத்தை இயக்குபவர் மொபைலில் பேசுவதற்கு அனுமதிக்கப்படும் என்றார். இது தவிர மொபைல் போனை கார் அல்லது பிற வாகனத்தில் வைத்து கொண்டு பேசாமல் பாக்கெட்டில் வைத்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம் என்றார்.
வாகனத்தை ஓட்டுபவர் மேற்காணும் நிபந்தனைகளை கடைபிடித்து மொபைலில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படாது மற்றும் போக்குவரத்து போலீசாரால் அபராதம் விதிக்கப்படாது. அப்படி ஒருவேளை அபராதம் விதிக்கப்பட்டால் ஒருவர் அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றும் மக்களவையில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஓட்டுநர்கள் சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவும் அதே நேரத்தில், சாலை விபத்துகளைக் குறைக்கும் அரசின் இலக்குடன் ஒத்திசைவதாக பார்க்கப்படுகிறது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.