ஆப்கனில் எல்லாம் போச்சு.. இந்தியர்கள் தான் காப்பாத்துனாங்க, ரொம்ப நன்றி - ஆப்கன் பெண் நெகிழ்ச்சி

ஆப்கன் பெண்

ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. எனது வீட்டை தாலிபான்கள் தீ வைத்து கொளுத்திவிட்டனர்.

  • Share this:
இந்தியர்களால் தான் நான் மீட்கப்பட்டேன் என டெல்லி வந்தடைந்த மீட்பு விமானத்தில் வந்த ஆப்கன் பெண் ஒருவர் இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுவதும் கைப்பற்றியிருக்கும் நிலையில் அங்கு நிலைமை மிகவும் அபாயகரமானதாக மாறியிருக்கிறது. எதிர்பார்ப்புக்கு மாறாக தாலிபான்கள் மின்னல் வேகத்தில் முன்னேறி காபுல் நகரை கைப்பற்றியதால் இந்தியர்கள், அமெரிக்கர்கள் என பல்வேறு வெளிநாட்டினரும் அங்கு சிக்கியுள்ளனர்.

ராஜாங்க நடவடிக்கைகள் மூலம் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி காபுலில் சிக்கியவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே சில விமானங்கள் மூலம் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினரும் சிலர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.

Also read: தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் – இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

இந்நிலையில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான சி-17 குளோப் மாஸ்டர் ராணுவ விமானம் மூலம் 168 பேர் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். டெல்லிக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய விமானப்படை தளமான ஹிண்டன் தளத்தில் சி-17 விமானம் தரையிறங்கியது.

மீட்கப்பட்ட 168 பேரில் 107 பேர் இந்தியர்கள். நேபாளத்தை சேர்ந்த இருவர் உட்பட ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிலரும் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளனர். இது தவிர ஏற்கனவே காபுலில் இருந்து தஜிகிஸ்தான் தலைநகரான துஷன்பேக்கு மீட்கப்பட்டிருந்த இந்தியர்கள் 87 பேரும் இன்று ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர்.



சி17 விமானம் மூலம் நாடு திரும்பியிருக்கும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் காசியாபாத்தில் செய்தியாளர்களிடையே பேசும்போது, “ஆப்கானிஸ்தானில் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. எனது வீட்டை தாலிபான்கள் தீ வைத்து கொளுத்திவிட்டனர். எனவே எனது மகள் மற்றும் இரு பேரப்பிள்ளைகளுடன் நான் இந்தியா வந்துவிட்டேன். நமது இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். இந்த உதவிக்காக நான் இந்தியாவுக்கு நன்றி கூறுகிறேன்” என அவர் தெரிவித்தார்.

Also read:   தாலிபான்களால் இஸ்லாமுக்கு களங்கம் – அஜ்மீர் தர்காவின் தலைவர் வருத்தம்

ஆப்கனில் இருந்து அழைத்துவரப்பட்டிருக்கும் அனைவருக்கும் கொரோனா விதிகளின்படி ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஆப்கானிஸ்தானியர்களுக்கு போலியோ தடுப்பூசியும் செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மால்வியா தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்று மட்டும் ஆப்கானிஸ்தானிலிருந்து 300 பேர் இந்தியா வருவதாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்திருக்கிறார். மேலும் இந்தியாவிலிருந்து தினமும் இரண்டு மீட்பு விமானங்கள் காபுலில் தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Published by:Arun
First published: