தேசியவாதம் குறித்து சொற்பொழிவு ஆற்றிவிட்டு, பொதுத்துறைகளை விற்பதா? - பட்ஜெட் குறித்து மம்தா பானர்ஜி விமர்சனம்..

மம்தா பானர்ஜி

நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களுக்கு விரோதமானது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.

 • Share this:
  நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களுக்கு விரோதமானது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார். உத்தரபங்கா உட்சவ தொடக்க விழாவில் கலந்துகொண்டு நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து விமர்சித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ”நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் மக்களின் நலன்களுக்கு எதிரானது என்றும், காப்பீட்டுத் துறையில் அதிகரிக்கப்பட்டிருக்கும் அந்நிய முதலீடுகள், மக்களுக்கு அவர்களின் எதிர்காலத்தைக் குறித்த நிச்சயமற்றதன்மையைத்தான் ஏற்படுத்தும்” என்றும் கூறியுள்ளார்.

  மேலும், ”மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மக்களை ஏமாற்றுவதை நோக்கமாகக் கொண்டது. பாஜகவினர் தேசியவாதம் குறித்து மற்றவர்களுக்குச் சொற்பொழிவு ஆற்றிவிட்டு,  நாட்டின் வளங்களைத் தனியாருக்கு விற்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள், காப்பீடு, ரயில்வே மற்றும் துறைமுகங்கள் என அனைத்தையும் விற்கிறார்கள்.


  விவசாயிகளுக்கு எதிராகவும், மக்கள் விரோதமாகவும் மற்றும் நாட்டுக்கு எதிரான பட்ஜெட்டாகவும் அமைந்துள்ளது. மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை நான் மீண்டும் இங்கு முன்வைக்கிறேன். மேலும், பல கோடி ரூபாய்க்காக அசையாத சொத்துகளையே தள்ளுபடி செய்ய முடிகிறதென்றால் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசுஏன் தயக்கம் காட்டுகிறது?
  புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்குப் பணம் இல்லை என்று கைவிரித்தது மத்திய அரசு. ஆனால், தங்கள் கட்சியில் சேரவரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களை விமானம் அனுப்பி வரவழைப்பதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வந்தது? கொரோனா பெருந்தொற்று காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு நாங்கள் பணம் செலுத்தினோம். ஆனால், மத்திய அரசு தொழிலாளர்களின் சிரமங்களைக் கண்டுகொள்ளவில்லை. கட்சி மாறும் தலைவர்களைப் புதுடெல்லிக்கு வரவழைப்பதற்கு மட்டும் அவர்களிடம் பணம் உள்ளது. இதுதான் பாஜகவின் உண்மையான நிறம்” என்றும் பேசியுள்ளார்.

  Published by:Gunavathy
  First published: