மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அருணாசாலப் பிரதேச மாநிலத்திற்கு இரு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள நம்சாய் மாவட்டத்தில் ரூ.1,000 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமித் ஷா மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "
காங்கிரஸ் தலைவர்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை எனவும் என்ன வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அவர்கள் விழிப்பு நிலையிலே கண்களை மூடிக்கொண்டு இருந்தால் வளர்ச்சி பணி எப்படி தென்படும். ராகுல் காந்தி தனது இத்தாலிய கண்ணாடியை கழற்றி விட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் பிரதமர் நரேந்திர மோடி, அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா கண்டு ஆகியோர் ஆட்சியின் கீழ் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்னவென்று ராகுலுக்கு தெரியும்.
அருணாச்சல பிரதேசத்தை முன்னேற்ற கடந்த எட்டு ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதி, சட்டம் ஒழுங்கு, சுற்றுலா ஆகிய துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு விதமாக முன்னேற்றம் கண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இடைத்தரகர்களால் மாநிலத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த பின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்பட்டு ஊழல் அற்ற நிலை உருவாக்கப்பட்டது. வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடைத்தரகர் இல்லாத ஆட்சி முறையை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தந்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க:
'உன் பெயர் முகமதா?’ என கேட்டு தாக்கப்பட்ட 65 வயது முதியவர் மரணம்
முன்னதாக அருணாசலப் பிரதேசத்தில் உள்ள புத்த மடாலயத்தில் சென்று மரியாதை செலுத்திய அமித் ஷா, இந்திய திபெத்திய எல்லைப் படை மற்றும் துணை ராணுவப் படையினரை சந்திக்க உள்ளார். இந்த பயணத்தில் அமித் ஷாவுடன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, மாநில முதலமைச்சர் பேமா கண்டு ஆகியோர் உடன் இருந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.