பாதிக்கப்பட்ட பெண்ணிடம் யாராவது கேட்டீர்களா?- உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும்... டாப்ஸியின் கோபமும்

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் யாராவது கேட்டீர்களா?- உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும்... டாப்ஸியின் கோபமும்

டாப்ஸி

பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி எழுப்பிய கேள்வி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

 • Share this:
  மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் மோகித் சுபாஷ் சவான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு 9- ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மோகித் சுபாஷின் தாய் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து சமாதானம் பேசியுள்ளார். சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் சிறுமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார்.

  தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்துக்கொள்ள சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நபர் மீது கொடுத்த புகாரை சிறுமியின் தரப்பு வாபஸ் பெற்றுள்ளது. அந்த நபர் சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தற்போது மறுப்பு தெரிவித்துள்ளதால் அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அந்த நபர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது நீதிபதி எஸ்.ஏ.போப்டே, குற்றம்சாட்டப்பட்டவரிடம்,  "நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தயாரா?” என்று கேட்டார். நாங்கள் உங்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப்படுத்தவில்லை. உங்களின் விருப்பத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம் என நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது.

  அதற்கு பதிலளித்த மோகித் சுபாஷ், நான் முன்பே அந்தப்பெண்ணிடம் என்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்டேன் அவர் மறுத்துவிட்டார். இப்போது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அந்தப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள முடியாது எனப் பதிலளித்துள்ளார். 'அந்தப் பெண்ணை திருமணம் செய்வதாக இருந்தால் நாங்கள் உங்களுக்கு உதவி செய்ய முடியும். இல்லையென்றால் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை  செய்ததற்காக சிறை செல்ல நேரிடும். உங்களின் அரசு வேலையும் பறிப்போகும்' என நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள டாப்ஸி, “ இந்தக்கேள்வியை யாராவது அந்தப்பெண்ணிடம் கேட்டார்களா?. பாலியல் வன்கொடுமை செய்தவனை அந்தப்பெண் மணக்க விரும்புவாளா? இதெல்லாம் ஒரு கேள்வியா? இது தீர்வா அல்லது தண்டனையா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: