நம் நாட்டில் கழிப்பிட வசதி குறித்த விழிப்புணர்வு பல வருடங்களுக்கு முன்னதாகவே தோன்றியிருந்தாலும், இன்னும் நிறைய கிராம பகுதிகளில் அந்த வசதி இல்லாமல் மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகின்றனர். பலர் அந்த வசதியை சரிவர பின்பற்றுகிறார்களா என்றால் அது சந்தேகம் தான். இன்னும் கூட, பல கிராமங்களில் மக்கள் கழிப்பறையைப் பயன்படுத்துவதை விட, வயல்வெளிகள், புதர்கள், காடுகள், நீர்நிலைகள் அல்லது வேறு ஏதேனும் திறந்தவெளிகளில் தங்கள் கழிவுகளை விடுவித்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது என்றும் நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், மக்களிடையே கழிப்பிட வசதிகளை பயன்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு அவர்களுக்காக லட்ச கணக்கில் கழிவறைகளை கட்டிக்கொடுத்த சிறந்த மனிதரை பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.
அவரது பெயர் சாயி தாமோதரன், இவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் உள்ள தனது கல்லூரியின் தேசிய சேவைத் திட்டத்தின் (NSS) பிரிவில் உறுப்பினராக இருந்தபோது, மக்களுக்கு துப்புரவு வசதிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாதது பெரிய கவலையை ஏற்படுத்தியது. அருகில் உள்ள கிராமப் பகுதிகளை பார்வையிட்ட அவர், திறந்த வெளியில் மலம் கழிப்பதைக் கண்டு வருத்தமடைந்ததோடு, இந்த பிரச்சனைக்கு ஒரு நடவடிக்கையை எடுக்க முடிவு செய்தார்.
Also read : நடிகர் சூர்யாவிற்கு அகில இந்திய அளவில் க்ஷத்ரியர்கள் எதிர்ப்பு - ராஜ்புத் கர்னி சேனா எச்சரிக்கை
இதையடுத்து, கடந்த 1987ம் ஆண்டு கிராமாலயா என்ற அரசு சாரா நிறுவனத்தை (NGO) தாமோதரன் நிறுவினார்.அன்றிலிருந்து இன்றுவரை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களில் உள்ள 1,000 கிராமங்கள் மற்றும் பல நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு WASH (Water, Sanitation and Hygiene) தொடர்பான அணுகலை வழங்குவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.தற்போது இவருக்கு 55 வயதாகிறது.
தாமோதரன் மற்றும் அவரது தன்னார்வத் தொண்டர்கள் கடந்த முப்பதாண்டுகளில் சுமார் 6 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகளையும் 500 பள்ளிக் கழிப்பறைகளையும் கட்டிக்கொடுத்துள்ளனர். கிராமாலயா மூலம் கட்டப்பட்ட சுகாதார வசதிகள் தென் மாநிலங்களில் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களின் தூய்மைப் பழக்கத்தை மாற்றியுள்ளதாக பெருமையுடன் தெரிவித்தார்.
Also read: முன்னாள் துணை மேயரின் மருமகள் குழந்தை கடத்தல் வழக்கில் முக்கியப் புள்ளி
திருச்சிராப்பள்ளி நகர முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட கல்மந்தை, கடந்த 2002 இல் இந்தியாவின் முதல் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) சேரியாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, 2003ம் ஆண்டில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 62 வீடுகளைக் கொண்ட தாண்டவம்பட்டி என்ற கிராமம், இந்தியாவின் முதல் ODF குடிசை கிராமமாக அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு மைக்கல்லும் தாமோதரனின் தொண்டு நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக இருந்தது.
நாட்டின் தென் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளையும், 300க்கும் மேற்பட்ட கிராமங்களையும் பல ஆண்டுகளாக திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத பகுதியாக மாற்ற கிராமாலயா தொண்டு நிறுவனம் உதவியுள்ளது. இதையடுத்து, கடந்த 2013ம் ஆண்டு தென்னிந்திய மாநிலங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தண்ணீர் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சி அளிப்பதற்கான தேசிய முக்கிய ஆதார மையங்களில் ஒன்றாக கிராமாலயாவை குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. அதேபோல, எஸ் தாமோதரன் குறைந்த விலை கழிப்பறை மாதிரிகள் மற்றும் கழிப்பறை தொழில்நுட்பம் மற்றும் பயிற்சிக்கான மையத்தையும் உருவாக்கியுள்ளார்.
கிராமப்புற ஏழைகள், நகர்ப்புற ஏழைகள், கடலோரப் பகுதிகள், பழங்குடியினர் மற்றும் நகரப் பஞ்சாயத்துகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுக் கழிப்பறை வசதிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே தாமோதரன் தனது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். இவர் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சர்வதேச நன்கொடையாளர் அமைப்புகளுடன் மிக நெருக்கமாக பணியாற்றியுள்ளார். 1980-களில் அறிமுகப்படுத்தப்பட்ட CRSP, 1990 களில் TSC, 2000 களில் NBA மற்றும் 2014 இல் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் மிஷன் திட்டம் போன்ற சுகாதாரத் திட்டங்களிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
தாமோதரன் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் இளம் பெண்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் வீட்டுக் கழிப்பறை பயன்பாடு மற்றும் சுகாதாரக் கல்வி மூலம் மேம்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து கடத்த 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி அன்று, தாமோதரனுக்கு ‘டாய்லெட் டைட்டன் விருதினை’ துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு வழங்கி கௌரவித்தார்.
மிஷன் பானி, நியூஸ்18 மற்றும் ஹார்பிக் இந்தியா ஆகியவற்றின் முன்முயற்சியானது, அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், பாதுகாப்பான சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் அரசு அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் விரிவுபடுத்துவதன் மூலம் பாதுகாப்பான குடிநீர், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில் அனைவருக்கும் பாதுகாப்பான சுகாதாரம் குறித்த தனது நுண்ணறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக, மிஷன் பானியின் உலக கழிப்பறை தின நிகழ்வில் மதிப்பிற்குரிய விருந்தினர்கள் குழுவில் எஸ் தாமோதரன் அவர்களும் இணைவார் என மிஷன் பாணி தெரிவித்துள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய சுகாதாரம் குறித்த அவரது நிபுணத்துவம், அனைவருக்கும் பாதுகாப்பான சுத்தம் மற்றும் சுகாதாரம் என்ற மிஷன் பானியின் நோக்கத்திற்கு ஒரு புதிய திசையை வழங்கும். மிஷன் பானி முயற்சியில் நீங்களும் ஒரு பகுதியாக இணையலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mission Paani