கேரளத்தில் சாக்குப்பையில் நோயாளியை சுமந்து பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம்

கேரளா

சபு பெயர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பட்டியலில் இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்துள்ளனர்.

 • Share this:
  கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் சமூகவலைதளத்தில்  வெளியான வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியடைய செய்தது. பிபிஇ கிட் அணிந்த நான்கு பேர் ஒருவரை சாக்கில் தூக்கிக்கொண்டு பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வீடியோ அது.

  கேரள மாநிலத்தில் தான் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கொரோனா மையத்தை தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர். சரியான பதில் இல்லாததால் தன்னார்வலர்களின் உதவியுடன் பிக் அப் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     இதுதொடர்பாக ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியில், கேரள மாநிலம் கூரம்குண்டு பகுதியை சேர்ந்தவர் சபு. இவரது மனைவி அனி சேவியர் மே 3-ம் தேதி கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சபு மற்றும் அவரது குழந்தைகளிடம் மருத்துவர்கள் கொரோனா டெஸ்ட் எடுக்கவில்லை. அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  Also Read: கொரோனா தொற்று..மரத்தின் மீது கட்டிலை கட்டி தன்னை தனிமைபடுத்திக் கொண்ட வாலிபர்

  இந்நிலையில் தான் மே 13-ம் தேதி சபு சுவாசிக்க சிரமப்பட்டுள்ளார். அவரால் பேசவும் முடியவில்லை. அவரது உறவினர் ஜார்ஜ் மதியம் 3 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் கொரோனா கட்டுப்பாட்டு அறை போன் செய்யுமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து ஜார்ஜ் கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். சபு பெயர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பட்டியலில் இல்லை என்பதால் ஆம்புலன்ஸ் அனுப்ப மறுத்துள்ளனர்.

  இதனையடுத்து அந்த கிராமத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து சபுவின் சகோதரர் மற்றும் அவரது பக்கத்துவீட்டுக்காரர், இரண்டு தன்னார்வலர்கள் என நான்கு பேரும் பிபிஇ கிட் அணிந்துக்கொண்டு சபுவை சாக்குபையில் தூக்கி சென்று பிக் அப் ட்ரக்கில் கொண்டு சென்றுள்ளனர். அவரது வீடு அமைந்திருக்கும் பகுதிக்குள் பிக் அப் ட்ரக் செல்லமுடியாது என்பதால் சபுவை சாக்கில் வைத்து தூக்கி வந்துள்ளனர். இதனை அக்கம் பக்கத்தினர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

  அந்தப்பகுதியில் சாலை பணிகள் நடைப்பெற்று வருவதால் பிக் அப் வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சபு பரிதாபமாக உயிரிழந்தார். மாவட்ட மருத்துவமனையில் அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தார்களா. அவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்ற விவரங்கள் கூட அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: