• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Nagasaki Day 2021: ’வலிகளும் ரணங்களும்’- அணுகுண்டின் பேரழிவை எதிர்கொண்டவர்கள் கூறுவது என்ன?

Nagasaki Day 2021: ’வலிகளும் ரணங்களும்’- அணுகுண்டின் பேரழிவை எதிர்கொண்டவர்கள் கூறுவது என்ன?

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று

ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று

நாகசாகியில் வெடிகுண்டு வீசிய போது அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்.

  • Share this:
அணு ஆயுதங்கள் முதன்முதலாக தயாரிக்கப்பட்டபோது அதனுடைய ஆபத்தை இந்த உலகம் உணர்ந்திருக்கவில்லை. ஆகஸ்ட் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டில் ஏற்பட்ட பேரழிவுக்குப் பின், அணு ஆயுதங்களை பயன்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதை மனித சமூகம் நன்கு உணர்ந்து கொண்டது. இரண்டாம் உலகப்போரில் சரணடைய மறுத்த ஜப்பான் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் அணு ஆயுத குண்டை வீசியது அமெரிக்கா.

ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அந்தக் குண்டு, நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கியது. திரும்பிய இடமெல்லாம் ரத்தக்களறியாகவும், வானுயர கட்டடங்கள் தரைமட்டமாகி புகை சூழ்ந்த பிரதேசமாகவும் காட்சியளித்தது. மக்களின் மரண ஓலங்கள் உலகின் காதுகளுக்கு கேட்கும் முன்பே ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகியின் மீது அடுத்த குண்டை வீசியது அமெரிக்கா. ப்ளுட்டோனியத்தால் செய்யப்பட்ட அந்த அணு குண்டு, ஹிரோஷிமா மீது வீசப்பட்ட லிட்டில் பாய் அணு குண்டை விட அதிக ஆற்றலை உடையதாக இருந்தது. உலகம் முன்னெப்போதும் சந்தித்திராத சேதத்தையும் ஏற்படுத்தியது.

பிணங்களின் காட்சி சாலையாக ஹிரோஷிமாவும், நாகசாகியும் இருந்தன. ஏறத்தாழ 1,40,000-க்கும் மேற்பட்டோர் நொடிப்பொழுதில் உயிரிழந்தனர். லட்சகணக்கானோர் காயம் ஏற்பட்டு அடுத்தடுத்த நாட்களில் உயிரிழப்பை சந்தத்தனர். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், கதிர்வீச்சுகளின் தாக்கத்தால் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாவதும், பிறவிக் குறைபாடுடன் பிறப்பதும் இன்றளவும் தொடர்கிறது. ஆகஸ்ட் 9 ஆம் தேதியான இன்றோடு, அந்த கொடூர சம்பவம் அரங்கேறி 76 ஆண்டுகள் ஆகிறது.

அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மாட்சுவோ(Matsuo). குண்டுவெடிப்பு குறித்து அவர் கூறும்போது," ஹிரோஷிமாவில் குண்டு வீசுவதற்கு முன்பு அமெரிக்கா எச்சரிக்கை நோட்டீஸ்களை விமானங்கள் மூலம் விட்டெறிந்தது. எனது தந்தை அந்த நோட்டீஸை வீட்டுக் கொண்டு வந்து காண்பித்து, ஹிரோஷிமாவில் நடக்க இருக்கும் ஆபத்து குறித்து எச்சரித்தார். நாங்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கிக்கொண்டோம். ஆனால், எனது தந்தை வழக்கம்போல் வேலைக்கு சென்றார்.

அப்போது, அமெரிக்கா திடீரென வீசிய குண்டில் எனது தந்தையும் பாதிக்கப்பட்டார். மூத்த அண்ணன் பரிதாபமாக இறந்தார். இந்த குண்டு வெடிப்பில் எனது தந்தை உயிர் பிழைத்தாலும், பின் நாட்களில் கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொண்டார்" எனத் தெரிவித்தார். இந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டபோது யோஷிரோ யமவாகி-க்கு 11 வயது. நாகசாகியில் அமெரிக்கா குண்டு வீசியதற்கு அடுத்த நாள், தனது தந்தையை தேடிச் சென்றுள்ளார். அருகில் இருந்த பவர் பிளாண்டில் வேலை பார்த்து கொண்டிருந்ததால், அங்கு சென்று பார்த்தபோது, பாதி எரிந்த நிலையில் அவரது உடல் இருந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தூரத்தில் இருந்து பார்க்கும்போது வெள்ளை துணியால் உடல் போர்த்தப்பட்டிருப்பதாக நினைத்த யோஷரோவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது வெள்ளைத் துணியல்ல, மேல் தோல்கள் உரிந்த நிலையில், அவரது தந்தை உடல் இருந்துள்ளது. செல்லும் வழியில் குடல்கள் வெளியேறிய நிலையில் பெண் உடலையும், கொடூரமான முறையில் இறந்து கிடந்த சிறுவன் உடலையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

Also Read :ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று..

ஹிரோயசு தகாவா (Hiroyasu Tagawa) வுக்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தபோது 12 வயது. அவரது குடும்பம் நாகசாகியில் வசித்து வந்துள்ளது. குண்டு வெடிப்பு நிகழ்வதற்கு சில நாட்களுக்கு முன்பு நாகசாயில் இருந்து சிறிது தொலைவில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சகோதரியுடன் தகாவா சென்றுள்ளார். இதனால், குண்டுவெடிப்பில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர், தாய் மற்றும் தந்தையை பறிகொடுத்துள்ளார். குண்டு வெடிப்பில் தாய் மற்றும் தந்தை காயங்களுடன் உயிர் பிழைத்தாலும், 3 நாட்களில் தந்தை இறந்துள்ளார். கதிர்வீச்சு பாதிப்பினால் தாய் அடுத்தடுத்த நாட்களில் இறந்துள்ளார்.

ஹிரோஷிமா, நாகசாகி என இரண்டு குண்டுவெடிப்பிலும் சிக்கி உயிர் பிழைத்தவர் யமக்குச்சி. இந்தப் பேரழிவின் சாட்சியாக வாழ்ந்த யமக்குச்சி 2010 ஆம் ஆண்டு தனது 93 வயதில் உயிரிழந்தார். கதிர்வீச்சு பாதிப்புகளை எதிர்கொண்ட அவர், பல்வேறு சிகிச்சைகள் மூலம் உயிர் பிழைத்தார். தன் வாழ் நாள் முழுவதும் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: